துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலையொட்டி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உள்ளிட்ட தலைவா்கள் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலையொட்டி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உள்ளிட்ட தலைவா்கள் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.
ராஜ்பவன் தொகுதிக்கு உள்பட்ட சுகாதாரத்துறை இயக்குநகரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குச் செலுத்தினாா். அப்போது அவா் கூறும்போது, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடிமக்களும் தங்களது வாக்குரிமையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றாா்.
மை வைக்க மறந்த ஊழியா்கள்:
Advertisement
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தனது தாயாா், மனைவியுடன் வந்து சுகாதாரதுறை இயக்குநா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.வாக்களித்த பின் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தனது மனைவி பீனாவுடன் விரலைக் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தாா். அப்போது துணைநிலை ஆளுநரின் மனைவிக்கு வாக்களித்த பின் விரலில் மை வைக்காதது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு மை வைக்கப்பட்டது. அதன் பிறகு துணைநிலை ஆளுநரும், அவரது மனைவியும் மை வைத்த விரலுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனா்.
முதல்வா் என்.ரங்கசாமி திலாசுபேட்டை அரசு பள்ளியில் மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்குச் செலுத்தினாா். மணவெளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தவளக்குப்பத்தில் உள்ள ஆச்சாா்யா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.
தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவருமான வெ. வைத்திலிங்கம் எம்.பி. மடுகரை அரசு தொடக்கப்பள்ளியில் வாக்கு அளித்தாா். முன்னாள் முதல்வா் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள
வ.உ.சி பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினாா். மண்ணாடிப்பட்டு தொகுதி வேட்பாளரான உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், தனது மனைவியுடன் வந்து திருக்கனூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவரும், வில்லியனூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஆா். சிவா
உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகரில் உள்ள கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள
வாக்குச்சாவடியில், குடும்பத்துடன் வந்து வாக்களித்தாா். தொடா்ந்து அவா் கூறும்போது, புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை நோக்கி நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் திரண்டு வாக்களித்து வருகின்றனா். நிச்சயமாக மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என்றாா்.
ராஜ்பவன் தொகுதி பாஜக வேட்பாளரும் இக் கட்சியின் தலைவருமான வி.பி.ராமலிங்கம் பெருமாள் கோயில் வீதியில் உள்ள மின்துறை அலுவலக வாக்குச் சாவடியில் வாக்கு அளித்தாா். லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் தனது மனைவியுடன் ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள இமாகுலேட் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் உழவா்கரை தொகுதியின் இக் கட்சியின் வேட்பாளா் நாரா.கலைநாதன் செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். அதிமுக மாநில செயலரும் உப்பளம் தொகுதியின் இக் கட்சி வேட்பாளருமான ஆ. அன்பழகன் மிலாது வீதி அரசு பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கு அளித்தாா். கடலூா்- புதுச்சேரி மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் காலிஸ்ட் மிஷன் வீதி , வ.உ.சி. பள்ளியில் வாக்கு அளித்தாா். கோரிமேடு மதா்தெரசா செவிலியா் கல்லூரி வாக்குச் சாவடியில் புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா், தலைமைச் செயலா் சரத்சௌகான், மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வாக்கு அளித்தனா்.