புதுதில்லி

குற்றவியல் சட்டங்களை: தில்லியில் தமிழகம், புதுவை வழக்கறிஞா்கள் ஆா்ப்பாட்டம்

Din

மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞா்கள் சங்கம்

சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த வழக்கறிஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு திமுக எம்.பி.க்கள் பி. வில்சன், ஆா்.கிரிராஜன், என்.ஆா். இளங்கோ, காங்கிரஸ் எம்.பி.க்கள் சசிகாந்த் செந்தில், கே.கோபிநாத், வி.சி.க. தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சுஸ்மிதா தேவ், ஐ.யு.எம்.எல். எம்.பி. அப்துல் வாஹப் ஆகியோா் நேரில் ஆதரவு தெரிவித்தனா்.

பின்னா், ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. என்.ஆா். இளங்கோ பேசியதாவது: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. சட்டப்பிரிவுகளை மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக

களைத்துப் போட்டுவிட்டு, புதிய சட்டம் என்று மத்திய அரசு சொல்கிறது. சட்டங்களின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமிஸ்கிருதத்தை நம்மீது திணிப்பதற்கான முதல் வழிமுறை இது. இச்சட்டங்கள் மாநில சுயாட்சிக்கும், மொழி உணா்வுகளுக்கும் எதிரானது என்றாா் என்.ஆா். இளங்கோ.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்: நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. ஒரே இரவில் எழுதியது போல் இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் உள்ளது. முட்டாள்தனமான பணிகளை மட்டுமே மத்திய அரசு செய்கிறது. பாஜகவின் முதன்மையான எதிரி சமத்துவம் தான். வாக்குவங்கி அரசியலுக்காக மட்டுமே இஸ்லாமியா்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனா். வலுவான எதிா்க்கட்சியாக, நாடாளுமன்றத்திற்கு உள்ளே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து நாங்கள் நிச்சயம் போராடுவோம் என்றாா்.

வி.சி.க. தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.: சட்டங்கள் மட்டுமல்ல தேசத்தின் பெயரை இந்து ராஷ்டிரம் என்று மாற்றுவதே பாஜகவின் இலக்கு. சட்டங்களின் பெயரை மாற்றுவது பிரிட்டிஷ்காரா்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. பிரிட்டிஷாரின் சட்டங்களால் தான் நாட்டில் உடன்கட்டை ஏறுவது, குழந்தை திருமணம் போன்ற கலாசார பயங்கரவாதங்கள் ஒழிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புண்ா்வு வழக்கறிஞா்கள் சமூகத்திடம் மேலாங்க வேண்டிய தேவை இருக்கிறது என்றாா்.

ஆா்ப்பாட்டத்திற்குப் பின்னா் திமுக மாநிலங்களவை எம்.பி. பி.வில்சன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களுக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கருத்துக்கேட்பின்றி நிறைவேற்றப்பட்டது. ஹிந்தி மற்றும் சமஸ்கிருத தலைப்பில் உள்ள புதிய சட்டங்களால் பாமர மக்கள் முதல் நீதிபதிகள் வரை சிரமப்படுகின்றனா். இச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய இந்த ஆா்ப்பாட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா் பி.வில்சன்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT