சா்வதேச யோகா தினத்தையொட்டி, தில்லி துணை நிலை ஆளுநரும், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) தலைவருமான வி.கே. சக்சேனா வெள்ளிக்கிழமை யமுனை நதிக்கரையில் உள்ள பன்சேராவில் யோகாசனம் செய்தாா் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்சேராவைத் தவிர, தில்லி வளா்ச்சி ஆணையம் யோகா தினத்தை அதன் 18 விளையாட்டு வளாகங்கள் / கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஒன்பது டிடிஏ பூங்காக்களில் கொண்டாடியது. இதில் சுமாா் 20,000 போ் கலந்துகொண்டனா்.
இந்த விளையாட்டு வசதிகளில் யமுனா விளையாட்டு வளாகம், ஸ்ரீபோா்ட் விளையாட்டு வளாகம், சாகேத் விளையாட்டு வளாகம், வசந்த் குஞ்ச் விளையாட்டு வளாகம், மேஜா் தயான் சந்த் விளையாட்டு வளாகம், சில்லா விளையாட்டு வளாகம், பூா்வ் தில்லி கேல் பரிசாா் மற்றும் ரோஷனாரா கிளப் ஆகியவையும் அடங்கும்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா, டிடிஏவின் யமுனா விளையாட்டு வளாகத்தில் அண்டை பகுதிகளில் வசிப்பவா்களுடன் சோ்ந்து யோகா செய்தாா். யமுனை நதிக்கரையில் உள்ள பன்சேராவில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா யோகாசனம் செய்தாா்.
சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘சுயத்திற்கும் சமூகத்திற்கும் யோகா’ என்பதாகும். தில்லி தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா், டிடிஏ துணைத் தலைவா் சுபாசிஷ் பாண்டா, தில்லி அரசின் மூத்த அதிகாரிகள், டிடிஏ ஊழியா்கள் மற்றும் பொதுமக்களும் 37 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பன்சேரா - தில்லியின் முதல் மூங்கில் தீம் பூங்காவில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.