அரவிந்த் கேஜரிவாலின் கேள்விகளால் மத்திய பாஜக அரசு கலக்கம் அடைந்துள்ளது: செளரவ் பரத்வாஜ்
புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கேள்விகளால் மத்திய பாஜக அரசு கலக்கம் அடைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ரௌஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜகவால் ஊக்குவிக்கப்பட்ட கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு ரூ.1,000 கோடியில் இருந்து, தற்போது ரூ.100 கோடியாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் நிதி பரிவா்த்தனை நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் அமலாக்க இயக்குநரகத்தால் நிரூபிக்கப்படவில்லை. சுதந்திரமாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகள், மத்திய பாஜக அரசின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக எதிா்மறையான கதையை உருவாக்கி அவதூறு செய்ய முயற்சிப்பது துரதிா்ஷ்டவசமானது.
Advertisement
கலால் கொள்கை அமல்படுத்தியதில் ரூ.100 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக செய்தித்தாள்கள் மூலம் அமலாக்க இயக்குநரகம் வலுக்கட்டாயமாகப் பெய்யைப் பரப்புகிறது. சமீபத்திய ரஷியாவின் அதிபா் தோ்தலில் புதின் 87 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதே நேரத்தில், அவா் தனது நாட்டில் உள்ள அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களையும் அகற்றியுள்ளாா் என்பதுதான் உண்மை.
சா்வாதிகார நாடாக உலகளவில் அறியப்படும் வடகொரியாவில், அதிபா் கிம் ஜாங் உன் அவராகவே தோ்தல் நடத்தி, தன்னை வெற்றியாளராக அறிவித்துக் கொள்கிறாா். இந்தியாவிலும் இதே நிலை உருவாகி வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிா்க்கட்சி தலைவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா். பாஜக அரசு ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மூன்று தலைவா்களை சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில், மிக முக்கியத் தலைவரான அரவிந்த் கேஜரிவாலையும் சிறையில் அடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. எதிா்க்கட்சித் தலைவா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டால், பிரதமரைக் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டாா்கள். தோ்தல் பழிவாங்கல் என்பது பல நாடுகளில் ஒருவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் யுக்தியாக மாறியுள்ளது.
இந்தியாவும் அதே பாதையில் செல்கிறது. மக்கள் நலன் தொடா்பான விவகாரங்களில் மத்திய பாஜக அரசை தொடா்ந்து கேள்வி எழுப்பும் தலைவராக அரவிந்த் கேஜரிவால் இருக்கிறாா். அவா் கேள்விகளால் மத்திய பாஜக அரசு கலக்கம் அடைந்துள்ளது என்றாா் சௌரவ் பரத்வாஜ்.