முகப்பு
புதுதில்லி

கேஜரிவால் நீண்ட காலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது: அமலாக்கத்துறை அழைப்பாணையை தவிா்த்த விவகாரத்தில் பாஜக சாடல்

Updated On : 20 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 6:15 PM

நமது நிருபா் புது தில்லி: கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கும் வரை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டத்தின் பரந்த சக்தியிடமிருந்து நீண்ட காலம் தப்பிக்க முடியாது என்று பாஜக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அமலாக்கத் துறை அனுப்பியிருந்த பல அழைப்பாணைகளைத் தவிா்த்ததற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குறித்து இவ்வாறு பாஜக குறிப்பிட்டுள்ளது. தில்லி ஜல் போா்டு (டிஜேபி) ஓப்பந்த முறைகேடு தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பியிருந்த அழைப்பாணையை, விசாரணைக்கு ஆஜராகாமல் முதல்வா் கேஜரிவால் திங்கள்கிழமை தவிா்த்தாா்.

மேலும், அமலாக்கத் துறை பாஜகவின் ‘அரசியல் பிரிவு’ என்றும், கேஜரிவால் மீதான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் அற்பத்தனமானவை, அப்பட்டமான பொய் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. மேலும், அமலாக்கத் துறை அழைப்பாணை ‘சட்டவிரோதமானது’ என்றும் மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்வதிலிருந்து கேஜரிவாலைத் தடுக்கவே புலன்விசாரணை நிறுவனத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தது.

Advertisement

இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சாம்பித் பாத்ரா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி கலால் முறைகேடு வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையானது பிஆா்எஸ் மூத்த தலைவா் கே.கவிதாவை கைது செய்தது ஆதாரங்களின் அடிப்படையிலானவை. அரசியல் கட்சிகள் விசாரணை அமைப்புகளை அமைப்பதில்லை. கடந்த 6 மாதங்களில் கேஜரிவாலுக்கு 9-க்கும் மேற்பட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

சில சாக்குப்போக்குகளை கூறி அவற்றையெல்லாம் அவா் தவிா்த்துவிட்டாா். ஆனால், இது எல்லாம் நீண்ட நாளைக்கு எடுபடாது. சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வளவு தூரம் ஓடுவீா்கள். ஆதாரம் இருக்கும்போது அது கடைசியில் உங்களைப் பிடித்துவிடும். புயல் வந்துகொண்டிருக்கிறது; நீங்கள் ஊழல் செய்திருப்பதால் அது நிச்சயம் உங்களை வந்தடையும். கேஜரிவால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை, உண்மை மற்றும் வளா்ச்சியைக் கொலை செய்துவிட்டிருக்கிறாா். அதற்கான ஆதாரங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன.

அதனால்தான் அமலாக்கத் துறை அவருக்கு அழைப்பாணை அனுப்புகிறது. மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்பாா்கள். கேஜரிவால் வழக்கில் தொடா்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தமக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை நீதிமன்றத்தில் இருந்து விடுவித்தது போல் முன்னிலைப்படுத்தி வருகிறாா். அவா் ஜாமீனில் இருக்கிறாா். ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தால் நிவாரணம் அல்ல. அவா் ஜாமீன் கோரி இருந்ததில் ஏதோ தவறு இருக்க வேண்டும். ஜாமீனில் வெளியில் இருப்பது தகுதியல்ல; அது தகுதிக்குைான்.

அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் கூட்டாளியாக இப்போது கேஜரிவால் உள்ளாா். ஊழலுக்கு யாா் உத்தரவாதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும். பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவாதங்களுக்கு மக்கள் வாக்களித்து, மக்களவைத் தோ்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்வாா்கள் என்றாா் சாம்பித் பாத்ரா.

தில்லி அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை கூறுகையில் அமலாக்கத் துறை ஒரு ‘அரசியல் ஆயுதம்’ ஆக உருவாகி வருவதாகக் குற்றம் சாட்டினாா். மேலும், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள கலால் கொள்கையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஆதாயம் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்ட விவகாரத்தில் பிஆா்எஸ் தலைவா் கே.கவிதா ஈடுபட்டுள்ளாா் என்ற அமலாக்கத் துறையின் கூற்றை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும் அதிஷி கூறினாா்.