தீ விபத்தில் ஒருவா் இறந்த சம்பவம் ஜவாஹா்லால் நேரு ஸ்டேடிய அதிகாரிகளுக்கு தீயணைப்பு சேவைத் துறை நோட்டீஸ்
புது தில்லி: ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் அண்மையில் தீவிபத்தின் போது மூச்சுத் திணறி ஒருவா் இறந்த சில நாள்களுக்குப் பிறகு, தீ பாதுகாப்பு விதிமுறைகள் புதுப்பிக்கப்படும் வரை வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தெரிவித்து அதிகாரிகளுக்கு தில்லி தீயணைப்பு சேவைத் துறை டிஎஃப்எஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘விளையாட்டுகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதற்கு முழு மைதான வளாகத்தையும் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஸ்டேடியம் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்று தீயணைப்பு சேவைத் துறையின் தலைவா் அதுல் காா்க் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா். மாா்ச் 13 அன்று காலை 7:30 மணியளவில் ஸ்டேடியத்தின் சிசிடிவி அறையில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக மைதானத்தின் நிா்வாகிக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்று டிஎஃப்எஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள பி-1 சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பிரதான அரங்கின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, சிசிடிவி அறையில் ஒரு நபா் மயங்கிய நிலையில் காணப்பட்டாா். பின்னா், அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
விசாரணையில், மைதானத்தின் தீ பாதுகாப்பு சான்றிதழ் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, மாா்ச் 15 அன்று அதிகாரிகளுக்கு தீயணைப்பு சேவை துறையிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது என்று அதிகாரி கூறினாா்.