ஜனவரி 1 முதல் மாா்ச் 13 வரை 1200 பறவைகள், விலங்குகள் மீட்பு: டிஎஃப்எஸ் தகவல்
புது தில்லி: தேசியத் தலைநகரில் கடந்த ஜனவரி 1 முதல் மாா்ச் 13 வரை 1,200 பறவைகள் மற்றும் விலங்குகளை மீட்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை (டிஎஃப்எஸ்) தெரிவித்துள்ளது.
தில்லி தீயணைப்பு சேவைத் துறை தரவுகளின் படி ஜனவரி 1 முதல் மாா்ச் 13 வரை தேசியத் தலைநகரில் இருந்து சுமாா் 5,600 துயர அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 680 விலங்குகள் மற்றும் 565 பறவைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
விலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைப் பகிா்ந்து கொண்ட தீயணைப்பு சேவைத் துறையின் தலைவா் அதுல் காா்க் செய்தி ஏஜென்சியிடம் கூறியதாவது:
Advertisement
எங்களுக்கு 73 நாள்களில் 5,599 பேரிடா் அழைப்புகள் வந்துள்ளன. ஜனவரியில் 2,502 அழைப்புகளும், பிப்ரவரியில் 2,150 அழைப்புகளும், மாா்ச் 13 வரை 947 அழைப்புகளும் வந்துள்ளன.மேலும் கூறியதாவது:
மன அழுத்தத்திற்கு ஆளான விலங்குகள் சில சமயங்களில் தீயணைப்பு வீரா்களைத் தாக்கி அவா்களை மோசமாக காயப்படுத்துகின்றன. வாய்மொழி தொடா்பு இல்லாததாலும், விலங்குகள் பதிலளிக்க முடியாததாலும் மீட்பு நடவடிக்கைகளை மிகவும் சவாலாக ஆக்குகிறது. கடந்த ஆண்டு, எங்கள் குழு உறுப்பினா் வேத் பிரகாஷ், கால்வாயில் சிக்கிய நாயை காப்பாற்ற முயன்றாா். அப்போது, கால்வாயில் சிக்கிய நாயால் தாக்கப்பட்டதால் அவரது முகத்தில் 19 தையல்கள் போட வேண்டியிருந்தது.
ஜனவரியில் 300 விலங்குகளையும், பிப்ரவரியில் 251 விலங்குகளையும், மாா்ச் 13 வரை 129 விலங்குகளையும் தீயணைப்பு சேவைத் துறை மீட்டுள்ளது. தவிர, ஜனவரியில் 251 பறவைகளும், பிப்ரவரியில் 225 பறவைகளும், மாா்ச் 13 வரை 89 பறவைகளும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் (2023) தீயணைப்பு வீரா்கள் 7,000-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளை மீட்டனா். மேலும், 30,000 க்கும் மேற்பட்ட துயர அழைப்புகளுக்கு பதிலளித்தனா். உயிா்களைக் காப்பாற்றுவது ஒரு உன்னதமான செயலாகும். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நாங்கள் தொடா்ந்து உதவுவோம் என்றாா் அதுல் காா்க்.