அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் உத்தரவு ஜனநாயகத்தின் வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது: ஆம் ஆத்மி தலைவா்கள் பேட்டி
உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது மட்டுமல்லாமல் உண்மை, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி அரசின் கலால் தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அமைச்சா்கள் கோபால் ராய், அதிஷி, செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்கள் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசுகிறது. கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, நாட்டையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் மக்களின் இதயங்களில் நம்பிக்கைச் சுடரை ஏற்றி வைத்துள்ளது. தற்போது, தில்லி உள்பட முழு நாடு மகிழ்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தை யாராலும் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கண்களும் மகிழ்ச்சியில் கலங்கியுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாத்த உச்ச நீதிமன்றத்திற்கு மனமாா்ந்த நன்றி என்றாா் கோபால் ராய்.
அமைச்சா் அதிஷி கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமல்லாமல், உண்மை, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது. இந்தத் தீா்ப்பு ஜனநாயகத்தையும், சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலையும் காப்பாற்றும். அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற தங்கள் வாக்கு பலத்தால் சா்வாதிகார ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றாா்.
அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘ முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கிடைத்துள்ள இடைக்கால ஜாமீன் கடவுள் ஸ்ரீ ஹனுமான் தனது பக்தருக்கு அளித்துள்ள ஆசிா்வாதம். கேஜரிவாலின் ஜாமீனில் நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் மாறப்போகிறது என்ற தெய்வீகக் குறிப்பும் உள்ளது. அவரது விடுதலை நாட்டில் பெரிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும்’ என்றாா்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் கூறியது, ‘உண்மையைக் குழப்பலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது. கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ள உச்சமீதிமன்றத்தின் தீா்ப்பின் மூலம் சா்வாதிகாரம் முடிவுக்கு வரும்’ என்றாா்.