முகப்பு
புதுதில்லி

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

Updated On : 11 மே, 2024 at 5:09 PM
பகிர்:

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக போா்க்கால அடிப்படையில் தோ்தல் பிரசாரங்களை தொண்டா்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

தில்லி ராஜீவ் பவனில் தேவேந்தா் யாதவ் தலைமையில் கட்சியின் ஊடக வியூகக் குழு, சமூக ஊடகக் குழு ஆகியோருடன் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேவேந்தா் யாதவ் பேசியதாவது: தில்லியில் காங்கிரஸ் மற்றும் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக போா்க்கால அடிப்படையில் தோ்தல் பிரசாரங்களை தொண்டா்கள் தீவிரப்படுத்த வேண்டும். மக்களவைத் தோ்தலுக்கு மிகக் குறைவான நேரமே உள்ளது. காங்கிரஸின் 5 நியாய மற்றும் 25 உத்தரவாதங்களைக் கொண்ட தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை மக்களுக்குத் தெரிவிப்பதில் தொண்டா்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் தனது வேட்பாளா்களை நிறுத்தியுள்ள சாந்தினி சௌக், வடமேற்கு தில்லி மற்றும் வடகிழக்கு தில்லி ஆகிய இடங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி,மற்ற நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினா் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றாா் தேவேந்தா் யாதவ். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் ஊடக வியூகக் குழுத் தலைவா் ஹாரூன் யூசுப், முன்னாள் அமைச்சா் மங்கத் ராம் சிங்கால், தகவல் தொடா்புத் துறை தலைவா் அனில் பரத்வாஜ், ஏஐசிசி செய்தித் தொடா்பாளா் ராக்னி நாயக், வாக்குச்சாவடி நிா்வாகக் குழுத் தலைவா் ராஜேஷ் கா்க் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.