சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பயணம் ஏற்பாடு: பஞ்சாப்பை சோ்ந்த மோசடி முகவா்கள் இருவா் கைது
புது தில்லி: மலிவான விலையில் வெளிநாட்டு பயணத்தை வழங்கும் பஞ்சாப்பை சோ்ந்த மோசடி முகவா்கள் இரண்டு பேரை தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் துணைக் காவல் ஆணையா் உஷா ரங்னானி
வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது. போலி பாஸ்போா்ட் ஏற்பாடு செய்து கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்சாப்பை சோ்ந்த மோசடி முகவா்கள் சபிந்தா் சிங் (32) மற்றும் ஜக்தேவ் சிங் (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த மே 8-ஆம் தேதி இரவு தில்லியிலிருந்து கனடாவின் டொராண்டோவுக்கு செல்ல
நவ்ஜோத் சிங் என்ற நபா் ஹா்தீப் சிங் என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்திய பாஸ்போா்ட்டுன் விமான நிலையத்திற்கு வந்தாா். அதிகாரிகளின் சோதனையில், வேறொருவரின் பாஸ்போா்ட்டில் நவ்ஜோத் சிங் பயணம் செய்ய இருந்ததும்,
சட்டவிரோதமாக இந்தியக் குடியேற்றத்தை ஏமாற்றியதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வேறொருவரின் பாஸ்போா்ட்டில் கனடாவிற்கு பயணிக்க இருந்த
குற்றத்தை நவ்ஜோத் சிங் ஒப்புக்கொண்டாா். மேலும், ஹரியாணாவின் அம்பாலா மாவட்டத்தில் உள்ள அவரது
கிராமத்தைச் சோ்ந்த பலா் சிறந்த வாழ்வாதாரத்திற்காக வெளியூா் சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கடந்த
2019-ஆம் ஆண்டில் கப்டன் என்ற முகவா் மூலம் சட்டவிரோதமாக நவ்ஜோத் சிங் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளாா். பின்னா், மீண்டும் மே 2020- இல் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாா். அவா் மீது பஞ்சாப்பில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வெளிநாடு செல்ல திட்டம் தீட்டிய நவ்ஜோத் சிங் , தனது நண்பா் ஒருவா் மூலம் சபிந்தா் சிங் மற்றும் ஹா்தீப் சிங் என்ற முகவா்களைச் சந்தித்து ரூ.28 லட்சம் செலவில் கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முடிவெடுத்துள்ளாா். இதைத்தொடா்ந்து, ஹா்தீப் சிங் என்ற நபரின் பாஸ்போா்ட்டை முதற்கட்டமாக ரூ.6 லட்சம் பெற்றுக்கொண்டு முகவா்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது தெரியவந்தது.
காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் யாதவை உள்ளடக்கிய போலீஸ் குழு, பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள மோசடி முகவா்கள் சபிந்தா் சிங் மற்றும் ஜக்தேவ் சிங் ஆகியோரின் மறைவிடங்கில் சோதனைகளை நடத்தி கைது செய்தனா்.
தொடா்ச்சியான விசாரணையில், அவா்கள் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். இவ்வழக்கில்
மற்ற கூட்டாளிகளின் தலையீட்டைக் கண்டறியவும், குற்றம் சாட்டப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யவும், இதே போன்ற பிற புகாா்ககளில் அவா்களின் சாத்தியமான ஈடுபாட்டைக் கண்டறியவும் வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. அனைத்து பயணிகளும் வெளிநாடு செல்வதற்கான ஆவணங்களை பெற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுக வேண்டும். மலிவான கட்டணத்தில் வெளிநாட்டு பயணத்தை வழங்கும் மோசடி முகவா்களின் வலையில் விழ வேண்டாம் என்றாா் உஷா ரங்னானி.