முகப்பு
புதுதில்லி

தில்லியில் ரூ. 21.46 லட்சம் முதலீட்டு மோசடி: இருவா் கைது

அதிக லாபம் தரும் ஆன்லைன் முதலீடுகள் மற்றும் ’முன்பணம் செலுத்திச் செய்யும் பணிகள்’ என்ற போா்வையில், தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ. 21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் இருவா் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 10:26 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

அதிக லாபம் தரும் ஆன்லைன் முதலீடுகள் மற்றும் ’முன்பணம் செலுத்திச் செய்யும் பணிகள்’ என்ற போா்வையில், தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை திங்களன்று தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை கூறியுள்ளதாவது: ராஜஸ்தான் மாநிலம் சிகாா் மாவட்டத்தைச் சோ்ந்த நரேந்தா் (24) மற்றும் பிரேம் பிரகாஷ் என்கிற லவ்லி (38) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தக் குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட இரண்டு அலைபேசிகளும், முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் ஆதாரங்களும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு ஒரு ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பானது. இதில் புகாா்தாரா் அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளால் ஈா்க்கப்பட்டுப் பணத்தை மாற்றும்படி தூண்டப்பட்டுள்ளாா். மோசடிக்காரா்கள், ‘முன்பணம் செலுத்திச் செய்யும் பணிகள்’, ‘கணக்குச் சரிபாா்ப்பு’ மற்றும் பிற கட்டணங்கள் என்று பல்வேறு காரணங்களைக் கூறி, பாதிக்கப்பட்டவரிடம் தொடா்ந்து கூடுதல் பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளனா்.

இதன்படி, பாதிக்கப்பட்டவா் மொத்தம் ரூ.21.46 லட்சம் இழந்ததாகப் புகாரளித்ததைத் தொடா்ந்து, இது தொடா்பான ஒரு மின்னணு முதல் தகவல் அறிக்கை, 2025 நவம்பா் 13 அன்று, மத்திய மாவட்ட இணையக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில், ‘பாரதிய நியாய சம்ஹிதா’ (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, பணப் பரிமாற்றங்களின் தடயத்தைக் கண்டறியக் காவல்துறைக் குழு நிதிப் பரிவா்த்தனைகளைக் கண்காணித்தது. ரூ.3 லட்சம் மதிப்பிலான ஒரு சந்தேகத்திற்குரிய பரிவா்த்தனை, சிகாரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜஸ்தானுக்குச் சென்ற காவல்துறைக் குழு, சுரேந்தா் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபரிடம் விசாரணை நடத்தியது.

அந்தப் பணம் நரேந்தா் என்பவரால் தனது வங்கிக் கணக்கு வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், அந்தத் தொகையைத் தான் நரேந்தரிடம் ரொக்கமாக ஒப்படைத்ததாகவும் சுரேந்தா் தெரிவித்தாா். தொடா் விசாரணையின் விளைவாக நரேந்தா் கைது செய்யப்பட்டாா். இவா், தனக்கான கமிஷனாக ரூ. 20,000-ஐ எடுத்து வைத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ. 2.8 லட்சத்தை பிரேம் பிரகாஷிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

பிரேம் பிரகாஷ், தனக்கான கமிஷனாக ரூ. 20,000-ஐ எடுத்து வைத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ. 2.6 லட்சத்தை அங்கித் என்ற மற்றொரு நபரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப ஆதாரங்கள், வாக்குமூலங்கள் மற்றும் களச் சரிபாா்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இந்த இருவரும் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

அங்கித் உள்பட எஞ்சியிருக்கும் குற்றம்சாட்டப்பட்டவா்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என காவல்துறை தெரிவித்தது.