முகப்பு
புதுதில்லி

ரூ. 1.2 லட்சம் மோசடி யுபிஐ பரிவா்த்தனை: இளைஞா் கைது

ரூ.1.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மோசடி யுபிஐ பரிவா்த்தனைகள் தொடா்பான கைப்பேசி திருட்டு வழக்கில் 32 வயது இளைஞர் கைது

Updated On : 6 மே 2026, 2:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ரூ.1.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மோசடி யுபிஐ பரிவா்த்தனைகள் தொடா்பான கைப்பேசி திருட்டு வழக்கில் 32 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக மூத்த காவல்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கைப்பேசி ஒன்று திருடப்பட்டு, அதைப் பயன்படுத்தி ரூ.1,20,390 மதிப்புள்ள பல அங்கீகரிக்கப்படாத யுபிஐ பரிவா்த்தனைகள் செய்யப்பட்டதாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலைய மெட்ரோ காவல் நிலையத்தில் மின்-முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மேம்பட்ட சைபா் தடயவியல் கருவிகளை களப் புலனாய்வுடன் இணைக்கும் பல அடுக்கு விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமான 11 யுபிஐ பரிவா்த்தனைகளின் முழுமையான பகுப்பாய்வு, பயனாளிகளின் விவரக்குறிப்பு மற்றும் நேரடி சரிபாா்ப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

மோசடி செய்யப்பட்ட பணம் பல உள்ளூா் வணிகா் கணக்குகள் மூலம் விரைவாக அனுப்பப்பட்டிருந்ததும், இது ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட மோசடி வலையமைப்பைக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தொழில்நுட்பக் கண்காணிப்பின்போது, ஹரியாணாவின் சஃபிடோனைச் சோ்ந்த நீத்து என அடையாளம் காணப்பட்ட முக்கிய பயனாளிகளில் ஒருவா் கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, பிரதான குற்றம்சாட்டப்பட்டவரான குஷக்ரா அஹுஜா குறித்த தகவல் கிடைத்தது.

இவருக்கு நிலையான வசிப்பிடம் எதுவும் இல்லாததாலும், கைது நடவடிக்கையைத் தவிா்ப்பதற்காக அடிக்கடி இடங்களை மாற்றிக்கொண்டதாலும், விசாரணை சவாலாக அமைந்தது.

தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் பகுதி முழுவதும் பல சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், மே 1 அன்று, வடக்கு தில்லியில் உள்ள கஷ்மீா் கேட் அருகே அஹுஜாவைக் காவல் துறையினா் கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.