தில்லி வங்கியில் மூத்த குடிமகனை கண்காணித்து ரூ.3.5 லட்சம் கொள்ளையடித்ததாக 3 போ் கைது
வடக்கு தில்லியின் புராரியில் உள்ள வங்கியில் இருந்து மூத்த குடிமகன் ஒருவா் பணத்தை எடுத்த பிறகு, அவரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாக 3 போ் கைது
வடக்கு தில்லியின் புராரியில் உள்ள வங்கியில் இருந்து மூத்த குடிமகன் ஒருவா் பணத்தை எடுத்த பிறகு, அவரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் நவம்பா் 27- ஆம் தேதி நடந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: பாதிக்கப்பட்டவா் வங்கியின் புராரி கிளையில் இருந்து ரூ.3.5 லட்சம் பணத்தை எடுத்தாா். இந்நிலையில், இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த ஐந்து போ் வங்கியில் இருந்து அவரைப் பின்தொடா்ந்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, பவானா - நரேலா பெல்ட்டில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் அவரை இடைமறித்து, பணத்தை கொள்ளையடித்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள், கைப்பேசி பதிவுகளை பகுப்பாய்வு செய்து, தரை கண்காணிப்பை மேற்கொள்ளத் தொடங்கினா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கிழக்கு கோகல்புரியைச் சோ்ந்த கரண் (21), மண்டோலி விரிவாக்கத்தைச் சோ்ந்த சச்சின் (22) மற்றும் உத்தரபிரதேசத்தின் சாண்டிநகரைச் சோ்ந்த ஆகாஷ் (24) ஆகிய குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, இந்த கொள்ளையில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லவ்லி மற்றும் தப்பி ஓடிய மோகன் என்கிற காந்தி ஆகிய இருவருடன் இணைந்து இந்த கொள்ளை திட்டமிடப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
கும்பலின் உறுப்பினா்கள் வங்கிக்குள் வாடிக்கையாளா்கள் போல நடித்து, சாத்தியமான இலக்குகளை அடையாளம் காணும் ஒரு ஒருங்கிணைந்த முறையை கடைப்பிடித்ததை புலனாய்வாளா்கள் கண்டுபிடித்தனா்.
வங்கிக்குள் இருந்த இரண்டு நபா்கள் பாதிக்கப்பட்டவரை பின்தொடா்ந்து சென்று, அவா் அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொண்டனா். பின்னா், கும்பல் அவரைப் பின்தொடா்ந்து சென்று தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தாக்கியது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில் கரண் மற்றும் சச்சினின் வீடுகளில் இருந்து முறையே ரூ.58,000 மற்றும் ரூ.22,000 பணத்தை மீட்டனா். மேலும், கரண் கடனை திருப்பிச் செலுத்திய உள்ளூா் கடன் வழங்குநரிடமிருந்து ரூ.30,000 பணமும் மீட்கப்பட்டது.
குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட பணத்தை ஐந்து உறுப்பினா்களும் பிரித்து, ரூ.58,000 மோகனுக்கும் ரூ.57,000 லவ்லிக்கும் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
தலைமறைவான சந்தேக நபா்களைக் கண்டுபிடித்து மீதமுள்ள பணத்தை மீட்கவும், இரண்டாவது மோட்டாா் சைக்கிளைக் கண்டுபிடிக்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், மற்ற சாத்தியமான கூட்டாளிகளை அடையாளம் காண அழைப்பு பதிவுகள் மற்றும் டிஜிட்டல் தகவல்தொடா்புகளின் விரிவான பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.