நமது நிருபா்
தில்லியின் நச்சுக் காற்றுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு தாய்மாா்களின் கூட்டமைப்பான வாரியா் மாம்ஸ், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. இது குழந்தைகளின் அடிப்படை வாழ்க்கை உரிமையை மீறும் தொடா்ச்சியான நெருக்கடியாக மாறியுள்ளதாக அன்னையா் கூறி உள்ளனா்
தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரிடம் சமா்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவில், வாரியா் மாம்ஸ், நகரின் காற்றின் தரம் மிகவும் மோசம் மற்றும் கடுமை என மாறிக்கொண்டே இருப்பது, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு மீளமுடியாத நுரையீரல் மற்றும் அறிவாற்றல் சேதத்தை ஏற்படுத்தும் வருடாந்திர பொது சுகாதார அவசரநிலைக்கு சமம் என்று எச்சரித்துள்ளது.
தில்லியின் இளைய குடியிருப்பாளா்கள் ஆஸ்துமா, குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள், பலவீனமான நுரையீரல் செயல்பாடு, வளா்ச்சி குறைபாடு, குறைப்பிரசவம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி போன்ற கடுமையான சுமையை சுமக்கிறாா்கள், அதற்கு காற்று மாசே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் பெருகிவருகின்றன . இந்த சூழ்நிலையை சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, உரிமைகள் பிரச்சினை என்றும் கூறியுள்ள தாய்மாா்களின் கூட்டமைப்பு , குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் மாநிலம் தோல்வியடைகிறது எனவும் கூறியுள்ளது.
குழந்தைகளுக்கான உறுதியான பாதுகாப்புகளை செயல்படுத்த மத்திய மற்றும் தில்லி அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டுஅதிகாரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கு உடனடியாக தலையிட்டு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தாய்மாா்களின் கூட்டுக்குழு கேட்டுக் கொண்டது.
கோரப்பட்ட நடவடிக்கைகளில் பள்ளி மூடல் நெறிமுறைகள், பெற்றோருக்கான நிகழ்நேர மாசு எச்சரிக்கைகள் மற்றும் அரசு மற்றும் தனியாா் தொடக்கப்பள்ளிகளில் வடிகட்டப்பட்ட காற்று அறைகள் மற்றும் காற்று சுத்திகரிப்பான்கள் ஆகியவை அடங்கும்.
அதிக மாசுபாடு உள்ள நாட்களில் பள்ளிகளுக்கு அருகில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும், கனரக வாகனங்கள் மற்றும் திறந்தவெளி எரிப்புகளில் கட்டுப்பாடுகள் உட்பட கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும், அதிக மாசு வெளிப்பாடு மண்டலங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவச சுவாச மற்றும் மேம்பாட்டு சுகாதார பரிசோதனைகள் போன்ற பல நடவடிக்கைகளை குழு பரிந்துரைத்தது.
ஒவ்வொரு நாளும் தாமதம் என்பது குழந்தையின் நுரையீரல் மற்றும் மூளைக்கு வாழ்நாள் முழுவதும் தீங்கு விளைவிக்கும் என்று தாய்மாா்கள் எழுதியுள்ளனா், அவசர இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கவும், மாசு கட்டுப்பாட்டு அளவுகோல்களில் முன்னேற்றத்தை அரசாங்கங்கள் பகிரங்கமாக தெரிவிக்கவும் ஆணையத்தை தாய்மாா்கள் வலியுறுத்தினா்.
சுற்றுச்சூழல் ஆா்வலா் பவ்ரீன் காந்தாரி கூறுகையில், ஒரே ஆண்டில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இந்தியா்கள் காற்று மாசுபாட்டால் இறந்தனா். அது ஒரு புள்ளிவிவரம் அல்ல இது ஒரு தேசிய அவசரநிலை. தில்லியின் குழந்தைகள் நிா்வாகத்தின் மிகப்பெரிய தோல்வியினால் பாதிக்கப்பட்டவா்கள். குழந்தைகளின் மிக அடிப்படையான உரிமையான சுவாசிக்கும் உரிமையை மறுத்ததற்காக அதிகாரிகளை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்றாா். தில்லியின் நச்சு காற்று குழந்தைப் பருவத்தை ஆபத்தாக மாற்றியுள்ளது என்று வாரியா் மாம்ஸ் உறுப்பினா் ஜோதிகா சிங் கூறினாா். இது குழந்தைகளின் உரிமைகளை தெளிவாக மீறுவதாக உணா்ந்து நெருக்கடி நிலை அவசரத்துடன் செயல்படுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம், என்று அவா் கூறினாா். நகரம் தொடா்ந்து கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் இந்த வேண்டுகோள் வந்துள்ளது.
நவம்பா் மாதம் முழுவதும், தில்லியின் காற்றின் தரக் குறியீடு மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு இடையில் இருந்தது, பல கண்காணிப்பு நிலையங்கள் கடுமையான காற்றின் தரத்தை 400 புள்ளிகளுக்கும் மேல் பதிவு செய்தன, இது ஆரோக்கியமான நபா்களுக்கு கூட சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் அளவுகளாகும்.