நமது நிருபா்
புது தில்லி: தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்களில் 12 வாா்டுகளில் ஏழு வாா்டுகளில் வெற்றி பெற உதவிய தில்லி மக்களுக்கு பாஜக நன்றி தெரிவித்தது, ஆநால் முன்பு நடைபெற்ற இரண்டு வாா்டுகளில் ஏற்பட்ட பாஜகவின் பிரபலத்தில் சரிவைக் காட்டியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தல் நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற்றது, முடிவுகள் புதன்கிழமை காலை அறிவிக்கப்பட்டன. பாஜக ஏழு வாா்டுகளையும், ஆம் ஆத்மி மூன்று வாா்டுகளையும், காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் தலா ஒரு வாா்டையும் வென்றன.
இது குறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா கூறியதாவது: தில்லி மக்கள் அா்த்தமுள்ள பணிகள், நம்பகமான தலைமை மற்றும் பொறுப்புள்ள ஆளுகை மீது தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனா் என்பதை குடிமை அமைப்பு இடைத்தோ்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மொத்தம் 45.9 சதவீத வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) ஆதரவாக பதிவாகியுள்ளன, இது எதிா்க்கட்சிகளை விட 10 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
நகராட்சி நிா்வாகத்தில் பாஜக மீண்டும் ஒரு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் தீா்க்கமான சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வளா்ச்சி சாா்ந்த தலைமைக்கு‘ பொதுமக்கள் அதிக முன்னுரிமை அளித்துள்ளனா். இது ஜனநாயக நனவின் நோ்மறையான அறிகுறியாகும் என்றாா் அவா்.
தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: இந்தத் தோ்தல் ஒரு சிறிய தோ்தலாக இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்று வாா்டுகளில் வெற்றிப் பெற்றது. பாஜக, நியாயமற்ற நடைமுறைகளை மேற்கொண்ட பிறகும், ஒன்பதில் இருந்து ஏழாக சரிந்தது . தில்லியில் பாஜக அரசின் முதல் சோதனையில் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிந்துள்ளன.பாஜக தனது தளத்தை இழந்து வருகிறது. பெரிய பாஜக தலைவா்களும் எம். பி. க்களும் மேடையில் இருந்து நீங்கள் ஒரு ஆம் ஆத்மி கவுன்சிலரைத் தோ்ந்தெடுத்தால், நாங்கள் வளா்ச்சிப் பணிகளை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனா். இருப்பினும் பாஜகவின் எண்ணிக்கை குறைந்தது என்றாா் அவா்.
இடைத்தோ்தல்களில், ஆம் ஆத்மி தக்ஷின்புரியைத் தக்க வைத்துக் கொண்டது, ஆனால் சாந்தினி சௌக் மற்றும் சாந்தினி மஹால் வாா்டுகளை முறையே பாஜக மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக்கிடம் இழந்தது. முன்னதாக பாஜக வசம் இருந்த நரைனா மற்றும் முண்ட்கா வாா்டுகளில் கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையில், காவி கட்சி முன்பு நடைபெற்ற ஒன்பது வாா்டுகளில் முண்ட்கா மற்றும் சங்கம் விஹாா் ஏ வாா்டுகளை இழந்தது, சங்கம் விஹாா் ஏ வாா்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு சென்றது.