காற்று மாசு கட்டுப்பாடு விதிகளை மீறியதாக கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நிகழாண்டில் ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மொத்தம் 1,750 கட்டுமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், விதிமீறல் தொடா்பாக 556 இடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் 48 இடங்களில் கட்டுமான பணியை நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அமைச்சா் சிா்சா கூறியதாவது: தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு அதிகாரிகள் 230 சாலைகள் மற்றும் குப்பைக் கிடங்குகளில் ஆய்வு செய்தனா். இதே போன்று தில்லி மாநகராட்சி 110 இடங்களிலும், பொதுப் பணித் துறை 36 இடங்களிலும் தில்லி வளா்ச்சி ஆணையம் 32 இடங்களிலும், தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு கழகம் 17 இடங்களிலும் ஆய்வு செய்தன. தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 8 இடங்களில் ஆய்வு நடத்தியது. இதன் மூலம் சுமாா் ரூ.1 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாசுக் கட்டுப்பாட்டை மீறியதற்காக நிகழாண்டில் 7.97 லட்சம் வாகனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் 4.33 லட்சம் அபராதங்கள் விதிக்கப்பட்டன. நிகழாண்டில் சாலையில் உள்ள 42,017 பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 18,000-ஆக இருந்தது.
மின் வாகனங்கள் பதிவு:
தில்லியில் நிகழாண்டு நவ.15 வரையில் பதிவுசெய்யப்பட்ட மின்வாகனங்களின் 4.54 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் டிச.31-ஆம் தேதி வரையில் மின் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை 3.46 லட்சமாக இருந்தது.
காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க 100 ஆய்வாளா்களை தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு நியமித்துள்ளது. தற்போது, 1,823 போ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் புதிதாக 350 பனி தெளிப்பு (மிஸ்ட் ஸ்பிரே) கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் 10,000 ஹீட்டா்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,407 குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு 3,377 ஹீட்டா்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.