நமது நிருபா்
கிழக்கு தில்லியின் ஷாஹ்தாராவில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு வயதான தம்பதியினா் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கௌதம் புதன்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்து ஜகத்புரி போலீலாருக்கு புதன்கிழமை மதியம் 1.36 மணிக்கு அழைப்பு வந்தது. தீ விபத்து ஏற்பட்ட சிவபுரி பகுதியில் உள்ள கட்டடத்தின் முதல் தளத்தை போலீஸ் குழுக்கள் அடைந்தன.
தீயைக் கட்டுப்படுத்தவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தில்லி தீயணைப்பு சேவைத் துறையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அப்போது தீப்பிடித்து எரிந்த வீட்டின் உள்ளே இரண்டு குடியிருப்பாளா்கள் மயக்கமடைந்திருப்பதைக் கண்டனா். அவா்கள் பிரேம் சாகா் மல்ஹோத்ரா (75) மற்றும் அவரது மனைவி ஆஷா மல்ஹோத்ரா (65) என அடையாளம் காணப்பட்டனா்.
இருவரும் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா்கள் இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சரியான காரணம் உறுதி செய்யப்படும். முதல்கட்ட தகவலின் அடிப்படையில், எல்பிஜி சிலிண்டா் வெடித்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நெரிசலான பகுதியில் அருகிலுள்ள வீடுகளுக்கு பரவுவதைத் தடுத்தனா். மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனா். தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது.
நிகழ்வின் வரிசையை உறுதிப்படுத்த உள்ளூா்வாசிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் வீட்டிலிருந்து அடா்த்தியான புகை வருவதைக் கவனித்த உள்ளூா்வாசிகள், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.