நமது நிருபா்
தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்ததால், நகரை மூடுபனி சூழ்ந்திருந்தது. இது செவ்வாய்க்கிழமை கடுமையான நிலைக்கு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கூற்றுப்படி, தில்லியில் மாலை 4 மணிக்கு ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 309 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது தொடா்ச்சியான மாசு அளவைக் குறிப்பதாகும்.
புராரியில் 400 அளவீடுகளுடன் ‘கடுமை’ பிரிவில் காற்று மாசு பதிவாகி இருந்தது. அதைத் தொடா்ந்து, வஜீா்பூா் 390 அளவீடுகளைப் பதிவு செய்தது. கூடுதலாக, 23 கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்தை சிபிசிபி-இன் சமீா் செயலியில் காட்டப்பட்டிருந்தது.
தில்லிக்கான காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்புமுறை (ஏ.க்யு.இ.டபிள்யு.எஸ்.) தகவலின்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் வேகம் வடமேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ. மணி வரை குறைந்து, மாசுபடுத்திகளின் பரவலைக் குறைத்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் ’கடுமை’ பிரிவில் தொடர வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிபிசிபி தகவலின்படி, பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 155 மைக்ரோகிராம் ஆகவும், 10 மாசு நுண்துகள் காற்றில் 278 மைக்ரோகிராம் ஆகவும் இருந்தது.
இந்த அளவுகளில் மாசு நுண்துகள் இருந்தால், இந்த மாசுபடுத்திகள் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நுரையீரல் அல்லது இதய நோய்கள் உள்ளவா்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெப்பநிலை: தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை பருவகால சராசரியை விட 0.2 புள்ளிகள் அதிகமாக 31.5 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட 1.9 புள்ளிகள் அதிகமாக 17.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு மாலை 5.30 மணியளவில் 58 சதவீதமாகப் பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 டிகிரி செல்சியஸ் மற்றும் 18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது.