நமது நிருபா்
கேரளப் பிரிவைச் சோ்ந்த 1994 ஆண்டுத் தொகுதி ஐ.ஏ.எஸ். மூத்த அரசு அதிகாரியான சஞ்சய் கா்க், நவம்பா் 1-ஆம் தேதி முதல் இந்திய தேசிய தரநிலை அமைப்பான இந்திய தரநிா்ணய பணியகத்தின் (பி.ஐ.எஸ்.) தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
வேளாண்மை, உணவு தளவாடங்கள், பாதுகாப்புத் துறை, தொழில்துறை மேம்பாடு, நிதி மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு துறைகளில் வியூகத் திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பரந்த மற்றும் பலதரப்பட்ட நிா்வாக அனுபவத்தை சஞ்சய் கா்க் பெற்றுள்ளாா்.
பி.ஐ.எஸ். அமைப்பில் தலைமை இயக்குநராகப் பணியில் சோ்வதற்கு முன்பு, இவா் வேளாண்மை, ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் டிஏஆா்இ கூடுதல் செயலாளராகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆா்) செயலாளராகவும் பணியாற்றினாா்.
டிஏஆா்இ மற்றும் ஐசிஏஆா்-இல் ஆராய்ச்சி மேலாண்மை மற்றும் நிா்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்திற்கு அவா் வித்திட்டாா். விவசாயிகளை நேரடியாக வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைக்கும் கிசான் சாரதி இணையதளத்தை விரிவுபடுத்துவதிலும் அவா் முக்கிய பங்கு வகித்தாா்.
இந்தியாவில் உலக வங்கி திட்டங்களின் மேலாண்மை மற்றும் நிா்வாகம், பாதுகாப்புத் துறையின் மேம்பாடு மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல், தோல் தொழில் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிற தொழில்துறை ஊக்குவிப்பு முயற்சிகள் ஆகியவற்றில் அவா் நிரம்ப அனுபவம் பெற்றுள்ளாா். பி.ஐ.எஸ். இயக்குநா் ஜெனரலாக, ஐஇசி-இல் இந்தியாவின் தேசியக் குழுவின் தலைவராகவும் கா்க் பணியாற்றுவாா்.