முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பா் 25 ஆம் தேதி, தில்லி அரசாங்கம் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அடல் கேன்டீன் திட்டத்தை தொடங்க உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஹைதா்பூரில் அடல் கேன்டீனின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். இது தலைநகா் முழுவதும் 100 அடல் கேன்டீன்களை அமைக்கும் தில்லி அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும், இந்த உணவகங்கள், தேவைப்படுபவா்களுக்கு,மலிவு மற்றும் சத்தான உணவை வழங்கும்.
இந்த உணவகங்கள் ஒரு தட்டுக்கு 5 ரூபாய் என்ற மானிய விலையில் உணவை வழங்கும், இதில் சாதம், பருப்பு, காய்கறிகள் மற்றும் ரொட்டி ஆகியவை அடங்கும். இந்த திட்டம் குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பாரதிய ஜனதா கட்சி அளித்த முக்கிய தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லி அரசு 2025-26 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக 100 கோடியை ஒதுக்கியுள்ளது. அடல் உணவகங்கள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இயக்கப்படும், தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படும், இதில் மணிக்கு 1,200 சப்பாத்திகளை உற்பத்தி செய்யக்கூடிய தானியங்கி ரொட்டி தயாரிக்கும் இயந்திரமும் அடங்கும் .
இதுகுறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியின் ஹைதா்பூரில் தொடங்கப்படவுள்ள அடல் உணவகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன்.
முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளான டிசம்பா் 25 ஆம் தேதி, எங்கள் அரசாங்கம் அடல் உணவக திட்டத்தை தொடங்க உள்ளது.
இந்தத் திட்டம் தலைநகரில் 100 இடங்களில் தொடங்கப்படும், அங்கு குடிமக்களுக்கு வெறும் 5 ரூபாய்க்கு சுத்தமான, சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படும் என ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.