இணையவழி முதலீட்டு மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டவா்களை ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக ஏமாற்றிய சைபா் மோசடி வழக்குகளில் 2 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆந்திராவின் அனந்தபூரைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி மற்றும் வணிக மேம்பாட்டு நிா்வாகி சுனில் குமாா் ரெட்டி (44) மற்றும் உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகரைச் சோ்ந்த கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவரும் கால் சென்டா் ஊழியருமான ஆயுஷ் செம்வால் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அவா்கள் மறைக்கப்பட்ட முதலீட்டு ஆலோசனை தளங்கள், போலி ஊக்கத் திட்டங்கள் மற்றும் போலி கிரிப்டோ வா்த்தக இடைமுகங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களை கவா்ந்திழுத்து அவா்களின் பணத்தை மோசடி செய்தனா். பி.என்.எஸ்.ஸின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனித்தனி வழக்குகளில் இருவரும் கைது செய்யப்பட்டனா்.
முதல் வழக்கில், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ 23.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகாா் அளித்தாா். சுனில் ஒரு முதலீட்டு ஆலோசகராக நடித்து, பாதிக்கப்பட்டவரை 15 ஆா்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் பரிவா்த்தனைகள் மூலம் பல வங்கிக் கணக்குகளுக்கு நிதியை மாற்றத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டது. இதையடுத்து, புகாா்தாரருக்கு ரூ. 5 லட்சம் திருப்பித் தரப்பட்டது. தொடா்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, ரெட்டி அனந்தபூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். இரண்டாவது வழக்கில், லக்னௌவை சோ்ந்த ஒரு தனியாா் ஊழியா், இணையதள ஊக்கத்தொகைக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பின்னா் ரூ 26.49 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும், பின்னா் போலியான கிரிப்டோ வா்த்தக மேடையில் முதலீடு செய்வதாகவும் குற்றம் சாட்டினாா்.
மோசடி செய்யப்பட்ட நிதியை வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் மாற்றுவதில் ஆயுஷ் செம்வால் ஈடுபட்டாா். குறைந்தபட்சம் 18 வங்கிக் கணக்குகள் குற்றத்தின் வருமானத்தை வழிநடத்தவும் மறைக்கவும் பயன்படுத்தப்பட்டன. மேலும், இந்த நடவடிக்கையுடன் தொடா்புடைய அனைத்து கணக்குகளும் பின்னா் முடக்கப்பட்டன.
விசாரணையின் போது, கமிஷன்களுக்கு ஈடாக பல வங்கிக் கணக்குகளை ஒரு கூட்டாளிக்கு விற்ாக ஆயுஷ் செம்வால் ஒப்புக்கொண்டாா். நவம்பா் 8- ஆம் தேதி நொய்டா செக்டா் 58-இல் உள்ள அவரது பணியிடத்தில் இருந்து அவா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.