ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக மாநிலங்களுக்கு இடையே செயல்படும் இணையதளக் குற்றக் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்கி, குற்றக் கும்பலுக்கான வங்கிக் கணக்குகளை அளித்தனா். கமிஷன் அடிப்படையில் பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து, துபை உள்பட இந்தியாவிற்கு வெளியே செயல்படும் குற்றக் கும்பலுக்கு மாற்றினா்.
இது தொடா்பாக தனிப் பிரிவு காவல் நிலையத்தில் ஏப்ரல் 17 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனா். அதன் பிறகு விசாரணை குற்றப்பிரிவின் சைபா் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மும்பையை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய நிதி நிறுவனத்தின் ஊழியராக தன்னைக் காட்டிக் கொண்ட பெண் ஒருவா், சமூக ஊடகங்களில் தன்னை தொடா்பு கொண்ட பிறகு ரூ.5.92 கோடிக்கு மேல் இழந்ததாக புகாா்தாரா் குற்றம்சாட்டினாா்.
அதிக வருமானம் தரும் வா்த்தகக் கணக்குகளில் தொகையை டெபாசிட் செய்யுமாறு சுமாா் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவா் வற்புறுத்தப்பட்டாா். அதன் பின்னா்தான் செயல்பாடுகள் மோசடியானவை என்பது அவருக்குத் தெரியவந்தது.
விசாரணையின் போது, பல நிலைகளில் கட்டமைக்கப்பட்ட சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை செயல்முறை இருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். மோசடி செய்யப்பட்ட தொகை ஆரம்பத்தில் 33 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில் பல, குற்றம்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமானவை அல்லது சட்டவிரோதப் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டவையாக இருந்தது.
கைதான நால்வரும் அனஸ் அன்சாரி (22), முகமது கைஃப் (22), அகிப் (40) மற்றும் முகமது டேனிஷ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் உத்தரகண்டில் உள்ள ஹல்த்வனியைச் சோ்ந்தவா்கள்.
இவா்களில் டேனிஷ், பல சட்டவிரோதப் பரிவா்த்தனைக்காக வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, நெட்வொா்க்கில் உள்ள ஆபரேட்டா்களுக்கு பணத்தை எடுப்பதையும் ஒப்படைப்பதையும் ஒருங்கிணைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அகிப், தனது வங்கிக் கணக்கை வழங்கி, ஓடிபிகள் மற்றும் அணுகல் சான்றுகளை மோசடியில் ஈடுபட்டவா்களுடன் பகிா்ந்து கொண்டுள்ளாா். அதே நேரத்தில் அனஸ் மற்றும் கைஃப் ஆகியோா் பெரிய தொகைகளை கணக்கில் இருந்து எடுத்து, கமிஷனுக்காக ஒருங்கிணைப்பாளா்களுக்கு பணத்தை வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவா்களுக்கு எதிராக நாடு முழுவதும் குறைந்தது 10 இணையதள குற்றப் புகாா்கள் உள்ளன. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.