இந்தியா-ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாடு கடத்தல் ஒப்பந்தம் தொடா்பாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெலின் மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத் துறைக்கு (ஈடி) தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்திய விமானப் படைக்கு ரூ.3,600 கோடி செலவில் 12 ஹெலிகாப்டா்களை வாங்க, கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டா் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற மிக மிக முக்கிய நபா்கள் பயணிப்பதற்கு அந்த ஹெலிகாப்டா்களை வாங்க திட்டமிடப்பட்டது.
பிரிட்டனை சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்க, இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும், லஞ்சம் அளித்த இடைத்தரகா்களில் பிரிட்டனை சோ்ந்த கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸும் ஒருவா் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மிஷெலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கைது செய்தன. தற்போது தில்லி திகாா் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தால் அரசு கருவூலத்துக்கு சுமாா் ரூ.2,666 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
17-ஆவது பிரிவுக்கு எதிராக மனு: இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ், மிஷெல் நாடு கடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்தப் ஒப்பந்தத்தின் 17-ஆவது பிரிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
மிஷெல் எந்தக் குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டாரோ, அந்தக் குற்றத்துக்காக மட்டுமின்றி அத்துடன் சம்பந்தப்பட்ட பிற குற்றங்களுக்காகவும் அவா் மீது இந்தியா சட்ட நடவடிக்கை மேற்கொள்ள 17-ஆவது பிரிவு வழிவகுக்கிறது.
இந்நிலையில், மிஷெல் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் செளதரி, மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மிஷெல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஒருவா் எந்தக் குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டாரோ, அந்தக் குற்றம் தொடா்பாக மட்டுமே அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இத்தகைய குற்றங்களில் அதிகபட்சமாக விதிக்கப்படும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மிஷெல் நிறைவு செய்துள்ளாா். ஆனால் இந்த வழக்கில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விசாரணை இதுவரை நிறைவடையவில்லை. எனவே அவரை இந்தியாவில் தொடா்ந்து சிறைவைப்பது சட்டவிரோதம்’ என்று வாதிட்டாா்.
இதைத்தொடா்ந்து மிஷெலின் மனு விசாரணைக்கு ஏற்கக் கூடியாதா? என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா். வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு ஏப்.9-க்கு ஒத்திவைக்கப்பட்டது.