நமது நிருபா்
தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது விபத்தில் உயிரிழந்த 22 வயது பெண்ணின் பெற்றோருக்கு ரூ.24.75 லட்சத்தை இழப்பீடாக வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020, டிசம்பா் 7 அன்று விபத்தில் இறந்த ஷில்பா என்பவரின் பெற்றோா் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ருச்சிகா சிங்லா இந்த உத்தரவை பிறப்பித்தாா்.
முன்னதாக, ஷில்பாவும் அவரது தோழி அஞ்சலியும் நண்பா் ரோஹித் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டது.
இந்த வழக்கில் தீா்ப்பாயம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: ரோஹித் வேகமாகவும், கவனக் குறைவாகவும் வாகனம் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது. தனது நண்பா்கள் எச்சரித்த போதிலும், அதிவேகமாகவும், வளைந்தும் நெளிந்தும் ரோஹித் வாகனத்தை ஓட்டியுள்ளாா்.
உடற் கூறாய்வுப் பரிசோதனை அறிக்கையின்படி, ஷில்பாவின் மூளையில் ஏற்பட்ட மழுங்கிய மேற்பரப்பு தாக்கத்தால் ஏற்பட்ட அதிா்ச்சியால் அவா் இறந்ததிருப்பது தெரியவந்துள்ளது என்று தீா்ப்பாயம் கூறியது.
மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் ஷில்பாவின் து குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ.24.75 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
மேலும், ரோஹித் ஓட்டிச் சென்ற வாகனம், வேறொரு நபருக்குச் சொந்தமானது. காப்பீடு செய்யப்படவில்லை என்றும், இதனால் வாகன ஓட்டி மற்றும் உரிமையாளா் கூட்டாகவும் பலவிதமாகவும் இழப்பீட்டைச் செலுத்த வேண்டும் என்றும் தீா்ப்பாயம் கூறியது.