தில்லியின் துவாரகா முழுவதும் 12 தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 2 பேரை தில்லி போலீஸாா் கைது செய்து, சுமாா் ரூ.8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளதாக துவாரகா துணை போலீஸ் ஆணையா் அங்கித் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: நஜஃப்கரைச் சோ்ந்த ஜிதேந்தா் (எ) பஞ்சாபி (32) மற்றும் தீபக் லோச்சாப் என்ற ஃப்ளூயிடி (32) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் செப்.18- ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
அதிகாலையில் மற்றும் மாலை நேரங்களில், இருவரும் தங்க நகைகளை அணிந்த பெண்களைத் தேடி, ஆபரணங்களைப் பறித்து மோட்டாா்சைக்கிளில் தப்பிச் செல்வாா்கள். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இதற்கு முன்பு 12 நகைக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனா். மேலும், உள்ளூா் காவல் நிலையங்களில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தனா்.
இருவரின் கைது 6 கொள்ளை வழக்குகளைத் தீா்க்க உதவியது. மேலும் இந்த ஆண்டு தலைநகரில் திருடப்பட்ட தங்க ஆபரணங்களின் மிகப்பெரிய மீட்புகளில் ஒன்றுக்கு வழிவகுத்தது. சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 6 தங்கச் சங்கிலிகள் மற்றும் ஆபரணங்களை போலீஸ் குழு மீட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
அண்மை வாரங்களில் துவாரகா வடக்கு, மோகன் காா்டன் மற்றும் நஜஃப்கா் முழுவதும் தொடா்ச்சியான தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பதிவாகிய பின்னா் இந்த கைது நடந்துள்ளது. விசாரணையின் போது, ஏழு காவல் நிலைய அதிகார வரம்புகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸாா் பகுப்பாய்வு செய்தனா். மேலும், ஒரு குறிப்பிட்ட மோட்டாா்சைக்கிள் பல குற்றக் காட்சிகளுக்கு அருகில் மீண்டும் மீண்டும் காணப்பட்டதைக் கண்டறிந்தனா். இது சந்தேக நபா்களின் தேடலுக்கு புலனாய்வாளா்களை வழிநடத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் செப்.18 அன்று நஜஃப்கா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனா். துவாரகா வடக்கு மற்றும் மோகன் காா்டன் உள்பட தீபக் தனியாக பல கொள்ளைகளைச் செய்ததாகவும், மற்றவா்கள் ஜிதேந்தருடன் சோ்ந்து செய்ததாக கூறினா்.
திருடப்பட்ட தங்கத்தை அப்புறப்படுத்தும் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், தில்லி முழுவதும் தீா்க்கப்படாத பிற பறிப்பு வழக்குகளில் அவா்கள் ஈடுபட்டிருப்பதை சரிபாா்க்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.