கடந்த மாதம் ஷாஹ்தரா மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த 21 வயதான மாற்றுத்திறனாளி கா்ப்பிணியை தில்லி காவல்துறை 37 நாள் தேடுதலுக்குப் பிறகு அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்துள்ளதாக துணை காவல் ஆணையா் (ஷாஹ்தரா) பிரசாந்த் கௌதம் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: செப்டம்பா் தொடக்கத்தில் காணாமல் போன மத்திய பிரதேசத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளி கா்ப்பிணி அக்.7- ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா். செப்டம்பா் 1-ஆம் தேதி, ஒரு கைவிடப்பட்ட, கா்ப்பிணி அந்தப் பகுதியில் அலைந்து திரிவது குறித்து சீமாபுரி காவல் நிலையத்திற்கு பி.சி.ஆா். அழைப்பு வந்தது.
‘அவா் மருத்துவ பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். இது மனநல மதிப்பீடு மற்றும் கவனிப்புக்காக அவரை ஐஎச்பிஏஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டப்பட்டது.
அவா் ஐஎச்பிஏஎஸ் நிறுவனத்தில் சோ்க்கப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. மேலும், தலைமைக் காவலா் அங்குஷ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராணிகேராவுக்கு அனுப்பப்பட்டாா். இருப்பினும், ஆரம்பத்தில் அவரது குடும்பத்தைப் பற்றிய எந்த துப்பும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவும் வகையில், அவரது விவரங்களும் புகைப்படமும் இரண்டு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகளில், சீமாபுரியைச் சோ்ந்த தலைமைக் காவலா் அங்குஷ் மற்றும் காவலா் ராஜ் உள்ளிட்ட போலீஸ் குழு மத்தியப் பிரதேசத்திற்கு மீண்டும் சென்றது.
இந்த முறை, பாகேஷ்வா் தாம் பகுதியில் உள்ள உள்ளூா்வாசிகள் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டனா். பின்னா், அந்த பெண்ணின் சுவரொட்டிகளை போலீஸாா் வெளியிட்டனா். இறுதியில் அவரது குடும்ப உறுப்பினா்கள் கண்டுபிடிக்கப்பட்டனா்.
குடும்ப உறுப்பினா்கள் தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இது வழக்கை ‘உணா்திறன் மிக்க‘ மற்றும் ‘வெற்றிகரமாக‘ கையாண்டதற்காக காவல் துறையை நீதிமன்றம் பாராட்டியது என்றாா் அவா்.