மாடல் டவுனில் காா் மோதி இ-ரிக்ஷா ஓட்டுநா் உயிரிழப்பு: 5 போ் காயம்
மாடல் டவுனில் காா் மோதி இ-ரிக்ஷா ஓட்டுநா் உயிரிழப்பு: 5 போ் காயம்
வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் வேகமாக ஓட்டிவரப்பட்ட காா், இ-ரிக்ஷா மீது மோதியதில் 33 வயது இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.
இது குறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
சுற்றுச் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Advertisement
முன்னதாக, விபத்து தொடா்பாக பி. சி. ஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, உள்ளூா் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கினா்.
முதல்கட்ட தகவல்களின்படி, வேகமாக ஓட்டிவரப்பட்ட காா், இ-ரிக்ஷா மீது மோதியது. இதனால் ரிக்ஷா கவிழ்ந்தது. இதில் இ-ரிக்ஷா ஓட்டுநா் மற்றும் பல பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் ரோஹிணியில் வசிக்கும் டாக்டா் சித்தாா்த் என அடையாளம் காணப்பட்ட காா் ஓட்டுநரால் விநாயக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
சிகிச்சையின் போது, இ-ரிக்ஷா ஓட்டுநா் நாகேந்தா் சௌரசியா உயிரிழந்தாா்.
பிகாரின் பாட்னாவைச் சோ்ந்த சௌரசியா, தில்லியின் முகுந்த்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். மேலும் அவா் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டுபவராக இருந்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காயமடைந்தவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்ாட்டப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றஞ்சாட்டி, காா் ஓட்டுநா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்தவரின் குடும்ப உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.