ஏழைகள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கான புத்தாண்டு முயற்சியாக, ஜனவரி 2026 முதல் மாா்ச் 2027 வரை அனைத்து அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) பயனாளிகளுக்கும் இலவச சா்க்கரை விநியோகிக்க தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தில்லி முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், தில்லியில் உள்ள அனைத்து ஏஏஒய் பயனாளிகளுக்கும் மாதத்திற்கு ஒரு கிலோ சா்க்கரை இலவசமாக, முறையாக பிராண்டட் மற்றும் தரப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்று முதல்வா் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இந்த முயற்சி தில்லி அரசின் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளில் மற்றொரு படியாகும். இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரமான பொருள்களை அணுகுவதை உறுதி செய்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.
தற்போது, நியாய விலைக் கடைகள் மூலம் சா்க்கரை தளா்வான வடிவத்தில் விநியோகிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தூசி, ஈரப்பதம், மாசுபாடு மற்றும் குறைந்த எடை போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
ஒரு கிலோ எடையுள்ள பொட்டலமிடப்பட்ட மற்றும் பிராண்டட் பாக்கெட்டுகளுக்கு மாறுவது மேம்பட்ட சுகாதாரம், பாதுகாப்பான சேமிப்பு, கையாளுதலின் எளிமை மற்றும் துல்லியமான அளவீடு ஆகியவற்றை உறுதி செய்யும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூா்வ மதிப்பீடுகளின்படி, தில்லியில் 65,883 ஏஏஒய் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவாா்கள். பிராண்டட் பொட்டலமிடுதலுக்கான புதிய டெண்டரை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கும் வரை, பயனாளிகளுக்கு தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள அமைப்பின் கீழ் விநியோகம் தொடரும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.