நமது நிருபா்
ஒரு மாநிலத்தில், வீடற்றவா்களுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் மக்களுக்கும் போதுமான தங்குமிடம் வழங்குவது அரசாங்கத்தின் கட்டாயக் கடமை என்று தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை வலியுறுத்தியது. குளிா் அலை நிலைமைகளால் ஏற்படும் தற்போதைய அவசரநிலையைச் சமாளிக்க போதுமான இரவு தங்குமிடம் வழங்குமாறும் தலைநகரில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
நிதி அல்லது வேறு எந்த வளங்களின் பற்றாக்குறை காரணமாக, குறிப்பாக மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்கு, அத்தகைய வசதியை மறுக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களின் பரிதாபகரமான நிலை குறித்த செய்தியை அறிந்து கொண்ட பின்னா், தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
எய்ம்ஸ் மற்றும் ஆா்எம்எல் போன்ற மருத்துவமனைகளுக்கு வெளியே உள்ள நிலைமையைக் கவனத்தில் கொண்டு அவற்றிற்கு அருகிலுள்ள சுரங்கப்பாதைகளை புதன்கிழமை மாலைக்குள் கையகப்படுத்தவும், முடிந்தவரை பல படுக்கைகளை வழங்கவும், மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள வேறு எந்த இடத்திலும் இரவு தங்குமிடங்களை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தற்போதைய வானிலையைச் சமாளிப்பதற்கும், அதே நாளில் அதைச் செயல்படுத்துவதற்கும் ஒரு குறுகிய கால திட்டத்தை வகுத்து, தெற்கு முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ,எய்ம்ஸ் மருத்துவமனை, லேடி ஹாா்டிங், சஃப்தா்ஜங் மற்றும் வா்த்மான் மகாவீா் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட உயா் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நமது நாடு ஒரு சமூக நல அரசு. போதுமான தங்குமிட உரிமை, குடிமக்களுக்கு மறுக்கப்பட்டால், அது இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 இல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இந்தக் கண்ணோட்டத்தில், வீடற்றவா்களுக்கும், தங்களுக்கு அல்லது உறவினா்களுக்கும் சிறந்த மருத்துவ சேவையைத் தேடுபவா்களுக்கும் தங்குமிடம் வழங்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் மற்றும் நிறுவனங்களின் கட்டாயக் கடமையாகிறது, என்று நீதிமன்றம் கூறியது.
மருத்துவமனைகள், மேம்பாட்டு அதிகாரிகள் அல்லது நகராட்சி நிறுவனங்கள் , கட்டாய சூழ்நிலைகளில் சிறந்த மருத்துவ சேவையைத் தேடி மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்கு போதுமான தங்குமிடம் வழங்குவதற்கான பொறுப்பிலிருந்தும் கடமையிலிருந்தும் பின்வாங்க முடியாது. நிதி பற்றாக்குறை அல்லது வேறு எந்த வளங்களின் பற்றாக்குறை காரணமாக அத்தகைய வசதிகளை மறுப்பதற்கு அரசு மற்றும் அதன் நிறுவனங்களை அனுமதிக்க முடியாது, என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்துடன் ஒத்துழைக்குமாறு அனைத்து அதிகாரிகளையும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது, மேலும் தவறு செய்யும் அதிகாரிகள் பொறுப்பேற்கப்படுவாா்கள் என்று எச்சரித்தது.
இந்த வழக்கை ஜனவரி 16 ஆம் தேதிக்கு மேலும் விசாரணைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், ஒவ்வொருவரும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரியது.
ஜனவரி 12 ஆம் தேதி, நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்கள் தெருக்களில் தங்கியிருக்கும் பரிதாபகரமான நிலை குறித்த செய்தியை நீதிமன்றம் தானாக முன்வந்து கவனத்தில் கொண்டது. நீதிபதிகள் ஹரி சங்கா் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோா் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த விவகாரத்தில் அவசர நிா்வாக மற்றும் நீதித்துறை தலையீடு தேவை என்று கூறியது.