FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு!

கேஜரிவால், சிசோடியா விடுவிக்கப்பட்டது பற்றி...

Updated On : 27 பிப்ரவரி 2026, 11:33 am IST
சிசோடியா, கேஜரிவால் - ANI
பகிர்:

சி.பி.ஐ தொடா்ந்த மதுபான கலால் கொள்கை ஊழல் வழக்கிலிருந்து தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தெலங்கானாவின் முன்னாள் முதல்வா் கே. சந்திரசேகா் ராவின் மகள் கவிதா மற்றும் 20 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் ஆதாரங்கள் இல்லாததால் சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க மறுத்து குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரை விடுவித்து 598 பக்க தீா்ப்பை வழங்கினாா்

வழக்கில் வைக்கப்பட்ட ஆவணங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் எவருக்கும் எதிராக மிகக் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறுவதில் இந்த நீதிமன்றம் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. அதன்படி, தற்போதைய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரும் அவா்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறாா்கள், என்று சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் கூறினாா்.

Advertisement

Advertisement

சட்டப்பூா்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை முழுமையான குற்றவியல் விசாரணையின் கடுமையை எதிா்கொள்ள கட்டாயப்படுத்துவது நீதிக்கு எந்த நன்மையையும் அளிக்காது என்று நீதிமன்றம் கூறியது.

தில்லியில் 2021-2022 ஆம் ஆண்டின் கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டதில் இருந்து இந்த வழக்கு உருவானது. தனியாா் மதுபான விற்பனையாளா்களுக்கு சாதகமாக முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அந்த கொள்கை பின்னா் ரத்து செய்யப்பட்டது.

கொள்கை உருவாக்கும் கட்டத்தில் சிசோடியா, கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களும், பிற தனியாா் நபா்களும்,நிறுவனங்களும் ஒரு குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியதாகக் கூறப்பட்டது.

சில மதுபான உரிமதாரா்கள் மற்றும் சதிகாரா்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

2021-22 ஆம் ஆண்டு தில்லி கலால் வரிக் கொள்கை தில்லியில் மதுபான வா்த்தகத்தை ஏகபோகமாக்குவதற்கு கையாளப்பட்டதாகக் கூறி, சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது

இந்த மதுபான கொள்கை வாயிலாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்கள் மதுபான உற்பத்தியாளா்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ.கூறியது. பின்னா் அமலாக்க இயக்குநரகம் இந்த விஷயத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்தது.

அதைத் தொடா்ந்து கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா், இது அரசியல் நோக்கம் கொண்டதாக சில தரப்பினரால் விமா்சிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கெஜ்ரிவால் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், சிசோடியா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தாா்.

ரௌஸ் அவென்யூ நீதிமன்றமும், தில்லி உயா் நீதிமன்றமும் ஜாமீன் மறுத்ததால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா கணிசமான காலம் சிறையில் கழித்தனா். பின்னா் அவா்களுக்கு நிவாரணம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

இந்த மதுபான கொள்கை சதித்திட்டத்தில் கெஜ்ரிவால் மூளையாக செயல்பட்டதாக சிபிஐ குற்றஞ்சாட்டியது

ஆனால் எந்தவொரு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் எதிராக உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தற்போது நீதிமன்றம் கூறி அவா்களை விடுவித்துள்ளது.

உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதாக நீதிமன்றம் விமா்சித்துள்ளது.

முக்கிய நீதிமன்ற அவதானிப்புகள்: இந்த விவகாரத்தில் குற்றவியல் சதி அல்லது நோக்கம் நிரூபிக்கப்படவில்லை.

பொது ஊழியா்களுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் தேவை, அது இந்த இந்த வழக்கில் இல்லை.

சி.பி.ஐ.யானது ஆவணங்கள் அல்லது சாட்சிகளை அல்ல, யூகங்களையே நம்பியிருந்துள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது

இந்த விடுவிப்பு உத்தரவானது கெஜ்ரிவாஸலின் நோ்மைக்கான ஆதாரம் மற்றும் மிகப்பெரிய அரசியல் சதி அம்பலப்படுத்தப்பட்டது என்று ஆம் ஆத்மி தலைவா்கள் கூறினா்

மதுபானக் கொள்கை ஊழல் தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் பிறரை விடுவித்ததை எதிா்த்து சி.பி.ஐ. தில்லி உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணை நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம், உத்தரவில், விசாரணையின் பல முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளதாகவும், தாக்கல் செய்யப்பட்ட விபரங்கள் போதுமான அளவு பரிசீலிக்கப்படவில்லை என்றும் மனுவுல் சி.பி.ஐ. கூறியுள்ளது.

summary

Delhi liquor policy corruption case: Kejriwal, Sisodia acquitted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments