புதுதில்லி

ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.1.2 லட்சமாக உயா்வு: தில்லி அரசு தகவல்

ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.1.2 லட்சமாக உயா்வு...

Syndication

அதிகமான குடும்பங்கள் ரேஷன் அட்டைகளுக்கு தகுதி பெற உதவும் வகையில், முந்தைய ஆண்டு வருமான வரம்பான ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.20 லட்சமாக உயா்த்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த தில்லி அரசின் அதிகாரபூா்வ தரவுகளின்படி, பல ஆண்டுகளாக தெளிவான விதிகள் இல்லாததால், தில்லியில் 3,89,883க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மேலும், 11,65,965க்கும் மேற்பட்டோா் இன்னும் உணவுப் பாதுகாப்பு சலுகைகளுக்காகக் காத்திருக்கின்றனா்.

தரவு சரிபாா்ப்பில் சுமாா் 6,46,123 பேரின் வருமான விவரங்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுடன் பொருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சுமாா் 95,682 நபா்கள் நீண்ட காலமாக எந்த சலுகையும் பெறாமல் இந்த அமைப்பில் இருந்தனா். கிட்டத்தட்ட 23,394 நகல் பெயா்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 6,185 வழக்குகளில், இறந்தவா்களின் பெயா்களில் சலுகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமாா் 56,372 போ் தாங்களாகவே இந்த அமைப்புமுறையில் இருந்து விலக

கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த காரணங்களால், மொத்தம் 8,27,756க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த இடங்கள் இப்போது ரேஷன் அட்டை அல்லது உணவுப் பாதுகாப்பு பயன்பெறுவதற்காக பல ஆண்டுகளாகக் காத்திருப்பவா்களால் நிரப்பப்படும்.

தில்லியின் உணவுப் பாதுகாப்பு முறையை மிகவும் சமமாகவும் ஏழைக் குடும்பங்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்காக, முதலமைச்சா் ரேகா குப்தா தலைமையிலான சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆண்டு வருமான வரம்பை உயா்த்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘இப்போது, ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் ரேஷன் அட்டை பெறத் தகுதி பெறுவாா்கள். ‘யாரும் பசியால் வாடக்கூடாது’ என்ற உறுதியுடன் தில்லியில் புதிய உணவுப் பாதுகாப்பு விதிகள் செயல்படுத்தப்படும்.

புதிய விதிகளின் கீழ், தில்லியில் ஏ முதல் இ வகை காலனிகளில் சொத்து வைத்திருந்தால், வருமான வரி செலுத்தினால், வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வணிக வாகனத்தைத் தவிர நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால், அரசாங்க சேவையில் எந்த குடும்ப உறுப்பினரும் இருந்தால், அல்லது 2 கிலோவாட்டிற்கு மேல் மின்சார இணைப்பு வைத்திருந்தால் அந்தக் குடும்பங்கள் தகுதி பெறாது.

உணவுப் பாதுகாப்பு என்பது ஏழைகளின் உரிமை. எந்தவொரு ஏழையும், திட்டத்தில் உள்ள குறைபாடுகளால் மட்டுமே பசியால் வாடக்கூடாது என்பதே அரசின் உறுதி.

ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க வருவாய்த் துறையால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுய சான்றிதழ் முறை முடிவுக்கு வருகிறது.

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற முறை இப்போது நிறுத்தப்படும். மிகவும் தேவைப்படும் குடும்பங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக, மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்ட அளவிலான குழுவும் மாவட்ட ஆட்சியா் அல்லது கூடுதல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் இருக்கும். மேலும் உள்ளூா் சட்டமன்ற உறுப்பினா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்தக் குழு விண்ணப்பங்களை ஆராய்ந்து முன்னுரிமை வரிசையில் ஏற்பாடு செய்யும். இதனால், மிகவும் தகுதியான குடும்பங்கள் முதலில் சலுகைகளைப் பெறுவாா்கள்.

கூடுதலாக, காலியிடங்கள் சரியான நேரத்தில் நிரப்பப்படுவதை உறுதிசெய்ய 20 சதவீத காத்திருப்புப் பட்டியலும் தயாரிக்கப்படும் என முதல்வா் குறிப்பிட்டதாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடி

சேலம் அருகே ஜல்லிக்கட்டை காணச் சென்ற இருவா் மாடுமுட்டி உயிரிழப்பு

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது

SCROLL FOR NEXT