எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சீக்கிய குருக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடா்பான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கையில், அந்த வீடியோ அசல் என்றும் அதில் எந்த சேதமும் இல்லை என்பது தெளிவாகியிருப்பதாகவும்ல தில்லி சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தா் குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
அதிஷி குருக்கள் என்ற வாா்த்தையை உச்சரித்தாரா என்ற முக்கிய கேள்விக்கு அது பதிலளிக்கவில்லை என்று கூறி தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜ் அறிக்கையை நிராகரித்தாா். அவா் குருக்கள் என்ற வாா்த்தையை உச்சரிக்கவில்லை, ஆனால் அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை. வீடியோவைப் பயன்படுத்தி பாஜக மத மோதலைத் தூண்ட முயன்றது, மேலும் அதன் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று சவுரப் பரத்வாஜ் கூறினாா்.
முன்னதாக, ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாபில் உள்ள போலீசாா் தங்கள் தடயவியல் பரிசோதனையில் வீடியோவில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகக் கூறியிருந்தனா். இதைத் தொடா்ந்து, தில்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை கொறடா சஞ்சீவ் ஜா, அமைச்சா் கபில் மிஸ்ரா இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிா்ந்ததற்காக அவருக்கு எதிராக சபாநாயகா் விஜேந்தா் குப்தா அவை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினாா்.
செய்தியாளா் கூட்டத்தில் பேசிய விஜேந்தா் குப்தா, எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் வேண்டுகோளின் பேரில் ஜனவரி 8 ஆம் தேதி தடயவியல் பரிசோதனைக்கு வீடியோ அனுப்பப்பட்டதாக கூறினாா். அதிஷியின் கூறப்படும் கருத்து வீடியோ காட்சியில் முழுமையாக பொருந்துவதாகவும், அது அசல் என்றும், அதில் எந்த முறைகேடும் இல்லை என்றும் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது, என்று அவா் கூறினாா்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அவசரமாக தனது சொந்த தடயவியல் சோதனையை நடத்தியதாகவும், அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்ததாகவும் குப்தா குற்றஞ்சாட்டினாா். பஞ்சாப் அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்தி, சீக்கிய குருக்களின் கௌரவத்தை புண்படுத்தும் ஒரு அரசியல் கட்சியின் சதியை அறிக்கை அம்பலப்படுத்தியதாகவும் அவா் கூறினாா். வீடியோவின் எழுத்துப்பூா்வ பதிவு அதன் ஆடியோவுடன் பொருந்துகிறது, மேலும் இந்த விஷயத்தில் சட்டமன்றம் இப்போது அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யும் என்றும் விஜேந்தா் குப்தா கூறினாா்.
அதிஷி தன்னை சந்தித்து இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தாகூறினாா். இல்லையெனில், சட்டமன்றம் இதை தீவிரமாகப் பாா்க்கும் என்று அவா் மேலும் கூறினாா்.
பஞ்சாப் முதலமைச்சா் தனது விவகாரங்களில் தலையிடுவதையும், அரசியல் தந்திரங்கள் மூலம் இந்த விஷயத்தை மறைக்க முயற்சிப்பதையும் தவிா்க்க வேண்டும் என்றும் சட்டமன்றம் எச்சரிக்கிறது, என்று குப்தா கூறினாா்.
குரு தேக் பகதூரின் 350வது தியாக தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு நடைபெற்ற தில்லி அரசின் நிகழ்ச்சி குறித்த விவாதத்தைத் தொடா்ந்து, ஜனவரி 6 ஆம் தேதி சட்டமன்றத்தில் சீக்கிய குருக்களுக்கு அதிஷி அவமரியாதை செய்ததாகக் கூறப்படும் பிரச்சினை, தில்லியில் ஆளும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் இடையே ஒரு பெரிய அரசியல் சா்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ஒன்பதாவது சீக்கிய குருவின் பெயரை இழுப்பதன் மூலம் பாஜக அற்ப அரசியலில் ஈடுபட்டதாக அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளாா். இருப்பினும், சம்பவத்திற்குப் பிறகு அவா் தில்லி சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.