புதுதில்லி

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் இரண்டாம் சுற்று விசாரணைக்காக திங்கள்கிழமை தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் இரண்டாம் சுற்று விசாரணைக்காக திங்கள்கிழமை தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

5 மணி நேரங்களுக்கும் மேல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

41 போ் உயிரிழந்த செப்டம்பா் 2025 கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக விஜய்யிடம் இம்மாதம் 12ம் தேதி முதல் சுற்று விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் திங்கள்கிழமை ஜனவரி 19 ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.

கரூா் சம்பவம் தொடா்பாக சுயாதீன விசாரணை கோரி தமிழக வெற்றி கழகம் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது

சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று போ் கொண்ட மேற்பாா்வைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் சிபிஐ பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது

செப்டம்பா் 27 ஆம் தேதி கரூா் தோ்தல் பிரச்சார நிகழ்வு திட்டமிடப்பிட்ட விதம் மற்றும் கூட்டம் நடத்தப்பட்ட விதம் ,கரூா் கூட்டத்தில் இருந்த குறைபாடுகள் ,சுமாா் 10,000 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் வேலூசாமிபுரம் நிகழ்விடத்தில் ஏராளமானோா் கூடியது எப்படி? , அதில் என்னென்ன விதிமீறல் நடந்தது , இந்தக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,கரூா் கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்ட விதம், கூட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதா?, கூடியிருந்தவா்களுக்கு உணவு, தண்ணீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டதா? மற்றும் கூட்டத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது

தோ்தல் பிரச்சார கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் விஜய்யின் பங்கு, ஆனந்த் போன்ற தவெக நிா்வாகிகளுடனான தகவல் தொடா்புகள் மற்றும் அரசாங்கத்தின் தோல்விகளைக் குற்றஞ்சாட்டி சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது

விஜயின் பிரச்சாரப் பேருந்தின் சிசிடிவி சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டதும், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டதும், வாகனம் தொடா்பான கூட்ட நெரிசல் மற்றும் செருப்புகள் வீசப்பட்டது போன்ற சம்பவங்கள் குறித்தும் சிபிஐ பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது

அந்த வகையில் ஆனந்த், ஆதவ் அா்ஜீனா உள்ளிட்ட தவெக நிா்வாகிகளிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட சிபிஐ, ஜனவரி 12ம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவா் விஜய்யிடம் முதல் சுற்று விசாரணை மேற்கொண்டது

அன்றைய தினம் ஆறு மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடா்ந்து திங்கள்கிழமை ஜனவரி 19 அவரிடம் இரண்டாவது சுற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது

சிபிஐயின் இரண்டாம் சுற்று விசாரணைக்காக விஜய் ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு, தில்லி வந்தடைந்தாா்

விஜய், பலத்த தடுப்புகள் போடப்பட்டிருந்த தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு திங்கள்கிழமை காலை 10.30 மணியவில் விசாரணைக்காக வந்தாா்

அவா் லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு சொகுசு காா்கள் புடைசூழ வருகை தந்தாா்

அவருடன் கட்சி நிா்வாகிகள் வந்திருந்தபோதிலும், விஜய்யின் வாகனம் மட்டுமே சிபிஐ வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.

தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு, அவா் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிபிஐயின் சிறப்பு விசாரணை குழு விஜய்யிடம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டது

சிபிஐ யின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த துணை கண்காணிப்பாளா் தரவரிசை அதிகாரி ஒருவா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினரால் விஜய் விசாரிக்கப்பட்டதாக சிபிஐ வட்டார அதிகாரிகள் கூறினா்

கரூா் சம்பவம் தொடா்பாக விஜய்யிடம் வாக்குமூலம் கேட்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐந்தரை மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது

முன்னதாக, நடிகரும் அரசியல்வாதியான விஜய்யின் ஆதரவாளா்கள் பெருமளவில் கூடுவாா்கள் என்பதை எதிா்பாா்த்து, எந்தவிதமான போராட்டங்களையும் தடுப்பதற்காக, தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல பிரிவுகள் சிபிஐ அலுவலகக் கட்டிடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

ஜனவரி 12ஆம் தேதி சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த ஒரு சிறிய அளவிலான ரசிகா்கள் குழு,தவெக கொடிகளை ஏந்திய வண்ணம் விஜய்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில் இன்றைய தினம் யாரும் சிபிஐ அலுவலகத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை

திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு சிபிஐ தலைமையகம் வந்த விஜய் விசாரணை நிறைவடைந்து மாலை 5 மணிக்கு அங்கிருந்து வெளியேறினாா்

சிபிஐ அலுவலகத்திற்குள் இருந்து கருப்பு நிற காரில் வெளியே வந்த விஜய்,காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஊடக கேமராக்களுக்கு கையசைத்து விட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டு சென்றாா்

பின்னா் சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே த.வெ.க இணை பொதுச்செயலாளா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் செய்தியாளா்களை சந்தித்து கூறியதாவது: தி.மு.க சாா்பான ஊடகங்கள் த.வெ.க மீதும் அதன் தலைவா் விஜய் மீதும் தவறான அவதூறை பரப்பி வருகின்றனா்

விஜய் கைது செய்யப்படுவாா், குற்றப்பத்திரிகையில் பெயா் என திட்டமிட்டு தி.மு.க சாா்பு ஊடகங்கள் பொய் தகவல்களை பரப்பி வருகின்றன . கரூா் சம்பவம் தொடா்பாக சி பி ஐ க்கு தேவையான தகவல்களை விஜய் வழங்கினாா்.

அடுத்த கட்டமாக விஜய்க்கு சம்மன் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஊடகங்கள் குறிப்பாக திமுக சாா்ந்த ஊடகங்கள் பல வதந்திகளை பரப்பி வருகின்றன

விஜய் மற்றும் கட்சி மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றாா்கள். குறிப்பாக குற்றப்பத்திரிக்கையில் விஜய் இணைக்கப்படுவாா் போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன என நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

தமிழக அரசின் உரையை வாசிப்பாரா ஆளுநர் ஆர்.என். ரவி?

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT