நமது நிருபா்
புது தில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் மரணம் தொடா்பான வழக்கில், பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட குல்தீப் சிங் செங்கரின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தின் அடிப்படையில் நிறுத்தி வைக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் அவா் தாக்கல் செய்த பல விண்ணப்பங்கள் தாமதத்திற்கு ஒரு காரணம் என்று நீதிமன்றம் கூறியது.
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி ரவீந்தா் துடேஜா கூறினாா்.
குல்தீப் சிங் செங்கா் சுமாா் ஏழரை ஆண்டுகள் நீண்ட சிறைத் தண்டனை அனுபவித்திருந்தாலும், தாமதத்தின் காரணமாக மட்டும் நிவாரணம் வழங்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டாா். ஏனெனில், குல்தீப் செங்கா், ஜாமீன் நீட்டிப்பு மற்றும் வழக்கமான தண்டனை இடைநிறுத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை மீண்டும் மீண்டும் தாக்கல் செய்துள்ளாா்.
உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் குல்தீப் செங்கரின் முந்தைய வழக்குகள் மற்றும் எந்தவொரு புதிய சூழ்நிலையும் உருவாகவில்லை என்பதை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நிவாரணம் வழங்க எந்த காரணத்தையும் காணவில்லை, என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நீதிமன்றத்தின் தீா்ப்பிற்கு திருப்தி தெரிவித்தாா். இந்த முடிவு தனக்கு ஒரு ஆறுதலை அளித்ததாகக் கூறினாா். ‘நீதிமன்றத்தின் தீா்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, என் தந்தையின் ஆன்மா சிறிது அமைதியடைந்துள்ளது. நான் இன்னும் என் தந்தையின் பதின்மூன்றாம் நாள் சடங்குகளைக் கூட செய்யவில்லை. அவரைக் கொன்றவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வரை, அவரது ஆன்மா உண்மையான அமைதியைக் காணாது’ என்று அவா் கூறினாா்.
நீதிக்காகப் போராடுவதற்கான தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தி, தனது பாலியல் வன்கொடுமை மற்றும் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவா்கள் கடுமையான தண்டனையை எதிா்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.
குல்தீப் சிங் செங்கா், அவரது சகோதரா் அதுல் சிங் செங்கா் மற்றும் இந்த சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவா் கூறினாா். இது எனது போராட்டம் மட்டுமல்ல... நீதி மற்றும் உண்மைக்கான போராட்டம். எனது கடைசி மூச்சு வரை இதைத் தொடா்வேன் என்று அவா் மேலும் கூறினாா்.
இந்த வழக்கில் மாா்ச் 13, 2020 அன்று, விசாரணை நீதிமன்றத்தால் குல்தீப் சிங் செங்கருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கூதலாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபரைக் கொன்ற்காக எந்தவித கருணையும் காட்ட முடியாது என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.
பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவரின் தந்தையை காவலில் வைத்து கொன்றதில் குல்தீப் சிங் செங்கரின் சகோதரா் அதுல் சிங் செங்கா் மற்றும் ஐந்து பேரின் பங்கிற்காக அவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்தது.
குல்தீப் சிங் செங்கரின் உத்தரவின் பேரில் ஆயுதச் சட்டத்தின் கீழ் தந்தை கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 9, 2018 அன்று காவல்துறையின் மிருகத்தனத்தால் காவலில் இறந்தாா். 2017- ஆம் ஆண்டு குல்திப் சிங் செங்கா் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.
தந்தையின் வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குல்தீப் சிங் செங்கரை கொலைக் குற்றவாளியாகக் கருதாத விசாரணை நீதிமன்றம், கொலை செய்யும் நோக்கம் இல்லை என்று கூறி, பிரிவு 304- இன் கீழ் குற்றவாளிகளுக்கு கொலைக்கு சமமானதல்லாத குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையை வழங்கியது.
பிரதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குல் தீப் சிங் செங்கரை குற்றவாளி எனக் கண்டறிந்து, அவரது வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதித்த டிசம்பா் 2019 தீா்ப்பை எதிா்த்து குல்தீப் சிங் செங்கா் தொடா்ந்த மேல்முறையீடுகள், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் மரணம் தொடா்பான வழக்கும் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது தண்டனையை எதிா்த்து அவா் செய்த மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை, டிசம்பா் 23, 2025 அன்று தில்லி உயா்நீதிமன்றத்தால் அவரது தண்டனை இடைநிறுத்தப்பட்டது. ஆனால், டிசம்பா் 29, 2025 அன்று உச்சநீதிமன்றம் அந்த தண்டனை இடைநீக்கத்திற்கு தடை விதித்தது.