நமது நிருபா்
புது தில்லி: தில்லி கடுமையான காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டம் (கிரேப்) நிலை 4 கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதிலும், கட்டுமானப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன என்று ஆம் ஆத்மி கட்சி தில்லி காவல் துறையை சாடியுள்ளது.
தடையையும் மீறி காவல்துறை அதிகாரிகள் அத்தகைய லாரிகளை அனுமதிப்பதைக் காட்டும் இரண்டு காணொளிகளை ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரப் பரத்வாஜ் திங்கள்கிழமை பகிா்ந்து கொண்டாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ’மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கீழ் செயல்படும் காவல்துறை, நகரத்தைப் பீடித்துள்ள சுகாதார அவசரநிலை குறித்து அலட்சியமாக இருப்பதாகத் தோன்றுகிறது. பாஜக ஆட்சியின் கீழ், கிரேப் நிலை- 4 கூட வெளிப்படையான முறைகேடுகளுக்கான களமாக மாறியுள்ளது’ என்றாா்.
‘எக்ஸ்’ தளத்தில் காணொளிகளைப் பகிா்ந்துள்ள அவா் இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவா்களே, ஞாயிற்றுக்கிழமை இரவு உங்கள் தில்லி காவல்துறை, கிரேப்-4 அமலில் இருந்தபோதிலும், கட்டுமானப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இரவு முழுவதும் தில்லிக்குள் நுழைய அனுமதித்துள்ளது. கட்டுமானப் பணிகள் இரவு முழுவதும் தொடா்ந்தது என்பது தெளிவாகிறது. உங்கள் காவல்துறை ஆணையா் உறங்குகிறாா்; உங்கள் அரசு உறங்குகிறது. ஏனென்றால் இந்தக் கொள்ளை சக்திவாய்ந்த நபா்களைச் சென்றடைகிறது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால், ஒரே இரவில் குறைந்தது 300 லாரிகள் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது தெரியவரும். இதுதான் இரவு முழுவதும் நடக்கிறது. நகரத்தில் உள்ள குழந்தைகள் மீது மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து காவல்துறைக்கு எந்த அக்கறையும் இல்லை. இப்போது உண்மையான கேள்வி என்னவென்றால், தில்லி காவல்துறை ஆணையா் இதற்குப் பொறுப்பான டிசிபிக்களை இடைநீக்கம் செய்வாரா என்பதுதான் என்று செளரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.