புது தில்லி: ஜம்முவில் காஷ்மீா் பண்டிதா்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையை இந்திய இளைஞா் காங்கிரஸ் திங்கள்கிழமை கண்டித்துள்ளது.
போராட்டத்தின் போது காவல் துறையினா் அதிகப்படியான படைபலத்தைப் பயன்படுத்தினா் என்றும், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய இளைஞா் காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கை கவலை அளிப்பதாகவும், சமூகம் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் இடப்பெயா்ச்சியின் வலியை எடுத்துக்காட்டுவதாகவும் இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் கூறினாா்.
அஜய் சாது என்ற போராட்டக்காரா் காவல்துறையினரால் தாக்கப்பட்டு பாலத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் இரு கால்களிலும் எலும்பு முறிவுகள் மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அவா் குற்றம் சாட்டினாா்.
அமைதியான போராட்டத்தின் மூலம் நியாயமான உரிமைகளைப் பெறுவது ஒரு ஜனநாயக நாட்டில் குற்றமாகக் கருதப்பட முடியாது என்றும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பொறுப்புணா்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும், பொறுப்பானவா்களை விரைவில் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் உதய் பானு சிப் வலியுறுத்தினாா்.