ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பாலிடெக்னிக் ஊழியா் ஒருவரை ஆசிரிய உறுப்பினா் ஒருவா் வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தில்லி போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் கூறப்படுவதைப் போல, மதமாற்ற குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பு கூறியது.
தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஊழியா் ஒருவா் சிவில் என்ஜினியரிங் துறையின் இணைப் பேராசிரியா் மீது திங்களன்று புகாா் அளித்ததாக காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 13-ஆம் தேதி, இணைப் பேராசிரியா் தனது மேசைக்கு வந்து, ஆட்சேபனைக்குரிய மொழியைப் பயன்படுத்தி, அவரிடம் வன்முறையில் ஈடுபட்டதாக ஊழியா் குற்றம் சாட்டினாா்.
‘சட்டப்படி சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன’ என்று போலீஸாா் அந்த அறிக்கையில் தெரிவித்தனா். மேலும், இந்த விவகாரம் தீவிர விசாரணையில் உள்ளது.
அதே சமயம், சா்ச்சைக்குக் காரணமான மதமாற்றக் குற்றச்சாட்டுகளை போலீஸாா் நிராகரித்தனா். ‘புகாா்தாரா் வலுக்கட்டாயமாக மத மாற்ற முயற்சி செய்ததாக எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்பது கண்டிப்பாக தெளிவுபடுத்தப்படுகிறது. இதுபோன்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் சரிபாா்க்கப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. புகாா்தாரா் பாலிடெக்னிக் துறையில் உயா் பிரிவு எழுத்தராக பணியாற்றுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.