தில்லியைச் சேர்ந்த போலீஸ் கமாண்டோவான 4 மாத கர்ப்பிணியை அவரது கணவர் 'டம்பிள்ஸ்' கொண்டு கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் மோகன் கார்டன் பகுதியில் வசித்து வரும் காஜல் சௌத்ரி(27) தில்லி ஸ்வாட் கமாண்டோ பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் அங்கூர், பாதுகாப்பு அமைச்சகத்தில் கிளர்க் பணியில் உள்ளார்.
திருமணம் ஆனது முதலே இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரதட்சிணை கேட்டு அங்கூர் தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
ஜன. 22 அன்று காலை இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட அங்கூர் கோபத்தில் காஜலை கடுமையாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி காஜலின் சகோதரருக்கு போன் செய்து, 'உன் அக்காவை கொலை செய்யப் போகிறேன். காவல்துறைக்கு ஆதாரம் அளிக்க, போனில் பதிவுசெய்து கொள்' என்று கூறினார். பின்னர் டம்பிள்ஸை எடுத்து காஜலின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அவரது தலை முற்றிலும் சிதைந்திருந்ததாக சகோதரர் நிகில் தெரிவித்தார்.
இறுதியாக, 'உன் அக்கா இறந்துவிட்டாள், மருத்துவமனைக்கு வந்து உடலை எடுத்துக்கொள்' என்று மீண்டும் போன் செய்து நிகிலிடம் கூறியிருக்கிறார் அங்கூர். அதற்குள் நிகில் தனது குடும்பத்தினருடன் வந்துவிட்டார்.
சுமார் 5 நாள்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த காஜல், சிகிச்சை பலனின்றி ஜன. 27 அன்று உயிரிழந்தார். நிகில் அளித்த புகாரின்படி அங்கூர் கைது செய்யப்பட்டார்.
நிகில் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், 'மருத்துவமனையில் என் அக்காவைப் பார்க்கும்போது அவரது தலை கடுமையாக சிதைந்திருந்தது. உடலில் பல இடங்கள் தாக்கப்பட்டு காயங்கள் இருந்தன. ஓர் எதிரிகூட இப்படி கொல்லப்பட்டிருக்கக் கூடாது' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
அங்கூரும் அவரது உறவினர்களும் வரதட்சிணை கேட்டு காஜலை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் ஏற்கெனவே பணம், தங்க நகைகள், ஒரு புல்லட் பைக் அனைத்தும் அங்கூருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து கார் வேண்டும் என்று கேட்டு வந்துள்ளனர். கார் வாங்கித் தரவில்லை என்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வேன் என்று காஜலின் தந்தையிடம் அங்கூர் கூறியிருக்கிறார். அதற்காக ஒரு காரும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
திருமணம் மற்றும் அங்கூரின் குடும்பத்திற்கு வரதட்சிணை கொடுக்க இதுவரை ரூ. 20 லட்சம் செலவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நீதி வேண்டும்" என்று காஜலின் பெற்றோர் கூறுகின்றனர்.
தொடர்ந்து இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கூர் - காஜலுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை காஜலின் பெற்றோரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.