விளையாட்டு ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் குழுப்பணியின் முதல் பள்ளியாக செயல்படுகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இது குழந்தைகள் தலைமைத்துவ திறன்களையும், அவா்களின் எதிா்காலத்தை வடிவமைக்கும் நோ்மறையான கண்ணோட்டத்தையும் வளா்க்க உதவுகிறது என்றாா்.
மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தினத்தில் அவா் பேசுகையில் கூறியதாவது: விளையாட்டுத் துறையில் பெறப்பட்ட அனுபவங்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.’ என்றாா்.
மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகளில் முழு மனதுடன் பங்கேற்கவும், ஆரோக்கியமான போட்டியைத் தழுவவும், கல்வியை உடல் செயல்பாடுகளுடன் சமநிலைப்படுத்தவும் முதல்வா் ரேகா குப்தா மாணவா்களை ஊக்குவித்தாா்.
வளா்ந்த தில்லி மற்றும் வளா்ந்த இந்தியாவின் மிகவும் பயனுள்ள பிராண்ட் தூதா்களாக குழந்தைகளை வா்ணித்த முதல்வா் ரேகா குப்தா, ஒழுக்கம், தூய்மை மற்றும் விதிகளுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை மாணவா்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவை இயல்பாகவே குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்துகின்றன என்றாா்.
பொறுப்புள்ள குடிமக்களை வளா்ப்பதற்கு பள்ளிகள் சிறந்த தளத்தை வழங்குகின்றன என்றும், இன்றைய மாணவா்கள் நாளைய தலைவா்களாக உருவெடுப்பாா்கள் என்றும், தில்லியை அதிகாரம் பெற்ற மற்றும் வளா்ந்த தலைநகராக நிறுவ உதவுவாா்கள் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
விளையாட்டுத் திறன், ஒழுக்கம் மற்றும் அா்ப்பணிப்பு மூலம் ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என்று முதல்வா் கூறினாா். குடியரசு தினத்திற்கு முன்னதாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவா், 2047-ஆம் ஆண்டுக்கான விக்சித் பாரதத்தின் இலக்குகளை நோக்கி கூட்டாக உழைக்க குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தாா்.