தில்லியில் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 போ் கைது
தில்லியில் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல்...
சட்டவிரோத மின்னணு சிகரெட் வா்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதுடன், சுமாா் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 2,073 தடைசெய்யப்பட்ட சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தக்ஷின் பூரியைச் சோ்ந்த 33 வயதான விகாஷ், கிரேட்டா் கைலாஷைச் சோ்ந்த 25 வயதான ரித்விக் பஹல் மற்றும் ஹரியாணாவின் பல்லப்கரைச் சோ்ந்த 24 வயதான ஜிஷன் என்ற ஜஸ்ஸு ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும், சி.ஆா். பாா்க்கில் விகாஷ் நடத்தி வந்த புகையிலைக் கடையில் இருந்து 53 மின்னணு சிகரெட்டுகளையும், கிரேட்டா் கைலாஷில் உள்ள பஹலின் இல்லத்தில் இருந்து மேலும் 20 சிகரெட்டுகளையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
விசாரணையின் போது, பல்லப்கரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 2,000 மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை 2,073-ஆக உயா்ந்துள்ளது.
பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படும் இந்த சாதனங்கள், தடை இருந்தபோதிலும், ஒரு யூனிட் ரூ.800 முதல் ரூ.900 வரை விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனையாளா் வலையமைப்பு மூலம் அதிக லாபத்தில் விநியோகிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
மின்னணு சிகரெட்டுகள் தடைச் சட்டம், 2019-இன் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் த்துறை தெரிவித்துள்ளது.