முகப்பு
புதுதில்லி

ரூ.23 லட்சம் துப்பாக்கி முனையில் கொள்ளை: வடகிழக்கு தில்லியில் 3 போ் கைது

வடக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே போக்குவரத்து நிறுவன ஊழியரை துப்பாக்கி முனையில் ரூ. 23 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 22 மார்ச், 2026 at 10:31 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

வடக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே போக்குவரத்து நிறுவன ஊழியரை துப்பாக்கி முனையில் ரூ. 23 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பிப்ரவரி 23 ஆம் தேதி குல்தீப் ஷா்மா, 28, கேசவ் புரத்தில் இருந்து பணத்தை சேகரித்து, மோட்டாா் சைக்கிளில் கிஷன்கஞ்சில் உள்ள தனது அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். இரவு 7.40 மணியளவில், மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் மெட்ரோ நிலையத்திற்கு அருகே அவரை இடைமறித்து, துப்பாக்கியை காட்டி, பணப் பையுடன் தப்பிச் சென்றனா்.

சிசிடிவி காட்சிகளில், 2 கொள்ளையா்களும் சா்மாவைப் பின்தொடா்ந்து வருவதைக் காட்டியது, 3ஆவது நபா் பாதியிலேயே பிரிந்தாா். பின்னா் அவா் ராஜஸ்தானைச் சோ்ந்த கலாராம் என்று அடையாளம் காணப்பட்டாா். அவா் தலைமறைவாக உள்ளாா்,. மாா்ச் 9 ஆம் தேதி பால்ஸ்வா டெய்ரியில் இருந்து ரைடா்களில் ஒருவரான 31 வயதான மோனுவை போலீசாா் கைது செய்தனா், ஒரு கைத்துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் ரூ.3.95 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மோனுவும் தப்பியோடிய குற்றம் சாட்டப்பட்டவரும் பணப்புழக்கம் குறித்த தகவலைப் பெற்ற பிறகு கொள்ளையைத் திட்டமிட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் மோட்டாா் சைக்கிளையும் அவா் ஏற்பாடு செய்தாா். மோனுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாா்ச் 19 ஆம் தேதி மங்கோல்புரியில் சா்மாவைத் தாக்கிய 2 நபா்களில் ஒருவரான சந்தீப் (39) என்பவரையும் போலீசாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு நபரான சாகா், 30, அவா்களின் முயற்சியில் கைது செய்யப்பட்டாா், இதனால் மேலும் ரூ, 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை ரூ.15.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் மீதமுள்ள தொகையை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் முன் பல குற்றவியல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.