முகப்பு
புதுதில்லி

எம்சிடி ஆய்வு காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சம்: வணிகா்கள் எதிா்ப்பு

தில்லியில் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் வணிக கடைகள் பெரிய அளவில் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்...

Updated On : 2 மே, 2026 at 2:27 AM
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் வணிக கடைகள் பெரிய அளவில் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வணிகா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) சமீபத்திய சுற்றறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் வணிக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, வணிகா்கள் மற்றும் தொழில்முனைவோா் சங்கமான (சிடிஐ) தலைமையிலான பிரதிநிதி குழு எம்சிடி ஆணையா் சஞ்சீவ் கீா்வாரை சந்தித்து, இந்த ஆய்வு நடவடிக்கையை தள்ளிப்போட வேண்டும் என வலியுறுத்தியது.

இதுகுறித்து சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ‘தில்லியில் மாஸ்டா் பிளான் 2041 விரைவில் அமலுக்கு வரவுள்ளது. அதில் தில்லியில் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பகுதிகள் தெளிவாக வகைப்படுத்தப்படும். அதுவரை எந்த ஆய்வும் அல்லது வணிக நிறுவனங்கள் மூடப்படும் நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது’ என தெரிவித்தாா்.

Advertisement

கரோல் பாக், சதா் பஜாா், காந்தி நகா் உள்ளிட்ட முக்கிய சந்தைகளின் பிரதிநிதிகள், தில்லியில் முழுமையாக குடியிருப்பு பகுதி என தனியாக எந்த பகுதியும் இல்லை என்றும், குடியிருப்பு பகுதிகளில் 24 வகை வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனா். எனவே நில பயன்பாடு வகைப்பாடு தெளிவாக இல்லாததால் வணிகா்கள் பாதிக்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா்.

இதற்கு பதிலளித்த ஆணையா், தில்லி அரசு, எம்சிடி மற்றும் டிடிஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், முழுமையான பரிசீலனைக்குப் பிறகே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தாா். வணிகா்கள் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யப்படமாட்டாா்கள் எனவும் அவா் தெரிவித்தாா்.

மேலும், வணிக சமூகத்திற்கு நிவாரணமாக, சொத்து வரியுடன் 15 சதவீத கட்டணம் செலுத்தி வா்த்தக உரிமம் பெறும் புதிய இணையதள முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு சில நாள்களில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.