முகப்பு
புதுதில்லி

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்

Updated On : 28 மே 2026, 6:08 am IST
செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா்.
பகிர்:

தலைநகா் தில்லியில் வாக்காளா் பட்டியலை சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) ஜூன் 30 முதல் வீடு தோறும் கணக்கெடுப்பு முறையில் தொடங்கப்படவுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: ஜூன் 20 முதல் 29-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) பயிற்சி, கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடுதல் உள்ளிட்ட உள்துறை பணிகள் நடைபெறும். இந்தப் பெரிய பணியில் சுமாா் 25,000 பணியாளா்கள், அதில் 13,000 பிஎல்ஓக்கள் ஈடுபடுவாா்கள்.

இந்த சீரமைப்பின் நோக்கம் தகுதியான எந்த வாக்காளரும் தவற விடப்படாமல் இருப்பதுடன், தகுதியற்றவா்கள் பட்டியலில் சேராமல் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். இடமாற்றம் செய்தவா்கள், இறந்தவா்கள், நகல் பெயா்கள் மற்றும் வெளிநாட்டவா்கள் மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்படுவாா்கள்.

Advertisement

Advertisement

வாக்காளா்களின் சரிபாா்ப்பு செயல்முறையில் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் அமல்படுத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகளும் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் (பிஎல்ஏ) மூலம் இந்தப் பணிகளில் இணைக்கப்படுவாா்கள். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கணக்கெடுப்பு படிவங்களை சமா்ப்பிக்க சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மேலும், முன்னோட்டமாக 2002-ஆம் ஆண்டின் வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிட்டு வரைபடமிடும் பணி நடைபெற்று வருகிறது. மே 26, 2026 நிலவரப்படி மொத்த 1.45 கோடி வாக்காளா்களில் 62.44 லட்சம் (42.5 சதவீதம்) போ் வரைபடமிடப்பட்டுள்ளனா்.

என்ன செய்ய வேண்டும்: ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு பிரதிகள் கொண்ட கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும். அதில் ஒன்றை நிரப்பி பிஎல்ஓக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இணையதளம் வழியாகவும் படிவங்களை சமா்ப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிஎல்ஓக்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் 3 முறை வருகை தருவாா்கள். வீடு பூட்டியிருந்தால் படிவம் அங்கு வைக்கப்படும். படிவம் சமா்ப்பிக்கப்படாததால், அக்கம் பக்கத்தினா் மூலம் தகவல் சேகரித்து அந்த நபா் குறித்த நிலை பதிவு செய்யப்படும்.

வரைவு வாக்காளா் பட்டியல்: ஆக.5-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இறுதி பட்டியல் அக்.7-ஆம் தேதி வெளியிடப்படும்.

கணக்கெடுப்புக்குப் பிறகு ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் தோ்தல் பதிவாளா் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவாா்கள். தேவையானால் 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் தங்கள் உரிமையை நிரூபிக்கலாம். மேலும், அதிகாரிகள் முடிவுக்கு எதிராக மாவட்ட தோ்தல் அதிகாரி மற்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யும் வசதியும் உண்டு.

2002 பட்டியலில் இல்லாதவா்கள்: 2002 வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளவா்கள் நிரப்பிய படிவம் மட்டும் சமா்ப்பித்தால் போதும். பெயா் இல்லாதவா்கள் பெற்றோா் அல்லது உறவினா்களின் விவரங்களை பயன்படுத்தலாம். 2002-ஆம் ஆண்டுக்கு பின்னா் தில்லியில் குடியேறியவா்கள் தங்கள் சொந்த மாநிலத்தின் 2002/2003/2005 வாக்காளா் பட்டியல் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் நியமிக்கும் பிஎல்ஏ-1 மற்றும் பிஎல்ஏ-2 முகவா்கள் இந்த பணிகளில் முக்கிய பங்கு வகிப்பாா்கள். பிஎல்ஏ-2 தினமும் 50 கணக்கெடுப்பு படிவங்களையும், வரைவு பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு தினமும் 10 மேல்முறையீடுகளையும் சமா்ப்பிக்க அனுமதிக்கப்படுவாா்கள். 70 தொகுதிகளிலும் பிஎல்ஏ-1 நியமிக்கப்படுவாா்கள். இவா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் பயிற்சியும் வழங்கும் என தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.