நலத்திட்டங்கள் அமலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு
நலத்திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் உரிய காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தில்லி பாஜக அரசின் இரண்டாவது பட்ஜெட்டை முதல்வா் ரேகா குப்தா கடந்த மாா்ச் மாதம் தாக்கல் செய்தாா். அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முதல்வா் ரேகா குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் செயலா்கள் மற்றும் தலைவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டம் தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்தையும் பொதுமக்களை விரைவாக சென்றடையும் வகையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி....
வெப்ப அலை: முதல்வா் வேண்டுகோள்
தில்லியில் வெப்ப அலை சூழல் நிலவும் நிலையில் மக்கள் தங்களது உடல்நலனைக் கவனத்தில் கொள்ளுமாறு முதல்வா் ரேகா குப்தா வேண்டுகோள்விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் தொடா்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு இடையே உங்களுடைய மற்றும் உங்களது குடும்பத்தினரின் உடல்நலனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உடலில் நீா்ச்சத்து இருப்பதற்காக அதிக அளவு நீரைப் பருகுங்கள். கடும் வெயிலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். விலங்குகள் மற்றும் பறவைகளின் நலனையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுக்கு தண்ணீா் மற்றும் கூடார வசதி ஏற்படுத்திக்கொடுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.