திருநெல்வேலி

"அ'னா சொல்கிறார்; "கானா' செய்கிறார்

 திருநெல்வேலி, ஆக. 6: ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சமுதாய வாக்குகளை ஒட்டுமொத்தமாக மடைமாற்றுவதில் திமுகவினர் தீவிரம் காட்டி வருகின

ப. இசக்கி

 திருநெல்வேலி, ஆக. 6: ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சமுதாய வாக்குகளை ஒட்டுமொத்தமாக மடைமாற்றுவதில் திமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அச் சமுதாய வாக்குகளை ஆளுங்கட்சி பக்கம் திருப்பிவிடுவதன் மூலம் சமுதாயத்திற்கும், தங்களுக்கும் நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்ள திமுகவில் உள்ள அச் சமுதாயப் பிரமுகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 எம்.ஜி.ஆர். காலத்து அதிமுகவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே மிகுந்த செல்வாக்கு இருந்து வந்தது. சமுதாய அமைப்பியல் வேறுபாட்டின் அடிப்படையில் தேவர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக திமுகவுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

 அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா-சசிகலா உறவுக்கு பின்பு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, தேவர் சமுதாய வாக்குகள் அதிமுக பக்கம் திரண்டதால், தாழ்த்தப்பட்ட சமுதாய வாக்குகள் சிதறிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலை தொடர்ந்து வந்துள்ளது.

 இப்போது இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதுமட்டுமன்றி, தேர்தலில் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தேவர் சமுதாய வாக்குகள் யாருக்கும் பயன்படாத நிலை உருவாகி உள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

 ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்தம் 1.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 31 சதம் நாடார், 23 சதம் தாழ்த்தப்பட்டோர், 11 சதம் தேவர், 10 சதம் பிள்ளைமார், எஞ்சிய 25 சதத்தில் முஸ்லிம், யாதவர், நாயக்கர் உள்ளிட்ட இதர சமுதாய வாக்குகள் உள்ளன.

 தேவர் சமுதாயத்தின் 11 சத வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு கூட்டிச் சேர்க்க அக்கட்சியினர் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

 அழகிரி ஆலோசனை:திமுக தென் மண்டல அமைப்புச் செயலரான மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆலோசனைப்படி, தேவர் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள கருங்குளம் ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியின் சில பகுதிகளுக்கு கட்சியின் தேவர் சமுதாய நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. மேற்பார்வையில் செயல்பட்டு வரும் இக்குழுவில் என். மாலைராஜா எம்.எல்.ஏ., நெல்லை துணை மேயர் கா. முத்துராமலிங்கம், வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 இவர்களுக்கு இந்தப் பகுதியில் பெண் எடுத்தல், கொடுத்தல் வழியில் உறவுமுறை ஏராளம். இவர்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்து வருவதோடு வாக்குகளைத் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 ""நமது சமுதாயம் திமுகவுக்கு எதிரி என்பது போன்ற ஒரு பிம்பத்தை அதிமுக ஏற்படுத்தி வைத்துள்ளது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் இத் தேர்தலில் நம் சமுதாய மக்கள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து அதைப் பொய்யாக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என நேரடியாகவே கூறி வாக்கு சேகரித்து வருகிறார் கருப்பசாமி பாண்டியன்.

 மற்றொரு கணக்கு: திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி "பிள்ளைமார்' சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

 இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் "பிள்ளைமார்' சமுதாயத்தைச் சேர்ந்த ஏபி.சி. வீரபாகு போட்டியிட்ட 1962-க்கு பிறகு தொடர்ந்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக பெரும்பான்மை வாக்கு வங்கியான நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே நிறுத்தப்பட்டுள்ளனர்.

 எனவே, இம்முறை நாடார் அல்லாத வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதில் அதிருப்தி அடைந்துள்ள அச் சமுதாயத்தினர் போராட்டங்களை நடத்தினர். ஆதலால், அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. அந்த வாக்குச் சிதறலை ஈடுகட்ட தேவர் சமுதாய வாக்குகள் பயன்படும் என்பது திமுகவினரின் மற்றொரு கணக்கு.

 திமுகவினரின் இந்த கணக்குகள் மெய்யானால் அது எதிர்காலத்தில் அதிமுக வாக்கு வங்கியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT