திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியின் பிரதான சாலைகளில் சமதளத்தில்
சீராகப் பதிக்கப்படாத பாதாள சாக்கடை மூடிகளால் "உயிர்ப்பலி' விபத்துகள் ஏற்படும் அபாயம்
தொடர்கிறது. இந்த அபாயத்தை பத்திரிகைகள் படங்களுடன் பலமுறை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் சுமார் ரூ.50 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. சாக்கடைக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்ய ஆங்காங்கே
"ஆள் இறங்கும் துளை'கள் (மேன்ஹோல்) உள்ளன. இவை இரும்பு மூடிகளால் மூடப்பட்டுள்ளன.
இந்த மூடிகள் சில இடங்களில் சாலையைவிட சற்று உயரமாகவும், சில இடங்களில் சற்று
பள்ளமாகவும் உள்ளன. சில இடங்களில் அந்த மூடிகள் ஒழுங்காக மூடாமல் உள்ளன. இதனால்
உருவாகும் மேடு, பள்ளங்களால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த மேடு, பள்ளங்களால் பஸ், லாரிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் இருசக்கர வாகன
ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அவர்கள் இந்த மேடு, பள்ளங்களில் தடுமாறி விழுந்து
காயமுறுகின்றனர். இந்த மூடிகளைத் தவிர்த்து சற்று ஒதுங்கிச் சென்றால் மற்ற வாகனங்களில்
அடிபடும் அபாயம் உள்ளது.
இந்த அவல நிலை குறித்து பல முறை பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி
அதிகாரிகளும், நிர்வாகிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
மாநகராட்சி நிர்வாகிகளின் கவனத்திற்கு நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, மத்திய, மாநில சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகிகள், அந்த
வழியாக தினமும் சென்று வரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மேடு,
பள்ளங்களை நேரில் பார்த்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, மதுரை பிரதான சாலை, திருச்செந்தூர் சாலை, வடக்கு
புறவழிச்சாலை, பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து ஆயுதப்படை மைதானத்திற்குச்
செல்லும் சாலை, ஹைகிரவுண்ட் சாலை, அரசு ஊழியர் குடியிருப்பு என வாகன போக்குவரத்து
அதிகம் இருக்கும் சாலைகளில்தான் இந்த அவலக் காட்சி அதிகம் காணப்படுகிறது.
இதுபோன்ற விஷயத்தில்கூட அதிகாரிகள் அசட்டை செய்வதுதான் ஏன் எனத் தெரியவில்லை.
உயிர்ப் பலிக்கு பின்னர் நடவடிக்கை: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் உள்ள சுலோசன
முதலியார் பாலத்தில் சேதமடைந்த பகுதியில் இருந்து இரும்புக் கம்பி ஒன்று வெளியே நீட்டிக்
கொண்டிருந்தது. எந்த அதிகாரிகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை.
இந்த அபாயம் குறித்து பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய பின்பு அந்த கம்பி இருந்த இடத்தில்
"கான்கிரீட்' கலவையைப் போட்டு ஒரு மேட்டை உருவாக்கி வைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை
அந்த கான்கிரீட் மேட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் கணவர், மனைவி இருவரும் கீழே
விழுந்தனர். எதிரே வந்த வேன் ஒன்று கணவர் மீது ஏறியதில் மனைவி கண்ணெதிரே அவர்
உயிரிழந்தார். அந்த உயிரிழப்புக்குப் பின்னர் அந்த "கான்கீரிட்' மேட்டை அகற்றி சாலையை சமன்
செய்தனர். அதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அக்கறை, அதிகாரிகளுக்கு ஏற்படவில்லை.
அதைப்போலத்தான் இந்த பாதாளச் சாக்கடை மூடிகளின் மேடு, பள்ளமும். மேலும் உயிரிழப்புகள்
ஏற்படாமல் தடுக்க இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.