திருநெல்வேலி

2.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முடங்கி கிடக்கும் 3 "மெகா' திட்டங்கள்: நிறைவேற்றுவது யார்?

 திருநெல்வேலி, மே 7: தொழில் வாய்ப்பு இல்லாத திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்று "மெகா' தொழில் திட்டங்களையும் நிறைவேற்றப் போவது யார்?  தென் மாவட்டங்களில் 1996-ல்

ப. இசக்கி

 திருநெல்வேலி, மே 7: தொழில் வாய்ப்பு இல்லாத திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்று "மெகா' தொழில் திட்டங்களையும் நிறைவேற்றப் போவது யார்?

 தென் மாவட்டங்களில் 1996-ல் நிகழ்ந்த சாதிக் கலவரத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க இங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் ஆணையம் பரிந்துரை செய்தது.

 அந்த பரிந்துரையை ஏற்று நான்குனேரியில் உயர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை நிறைவேற்ற 2001-ல் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இத் திட்டத்தை நிறைவேற்ற அங்கு சுமார் 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

 இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 1.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடன் ஏற்பட்ட (அதிமுக) ஆட்சி மாற்றத்திற்கு பின் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதற்கு ஆட்சி மாற்றமே காரணம் என திமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. எனினும், மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இந்த திட்டம் பல்பொருள் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.

 வரவேற்பு வளைவு கட்டுவது, அடிக்கடி குழிகளைத் தோண்டுவதும், பின்னர் அவற்றை மூடுவதுமான பணிகள் நடைபெறுகிறதே தவிர "திட்டம் உருப்பெறும்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பணிகள் எதுவும் இதுவரையில் அங்கு நடைபெற்றதாகத் தெரியவில்லை.

 ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா: திருநெல்வேலி அருகே உள்ள கோடகநல்லூரில் ரூ.800 கோடி செலவில் "ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா' அமைக்கப்படும் என 2005-ல் அப்போதைய தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

 மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் ஆண்டிபட்டி, பல்லடம், ஈரோடு, குமாரபாளையம் ஆகிய 4 இடங்களில் இத் திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்தாவது இடமாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டது.

 இந்த திட்டத்திற்காக கோடகநல்லூரில் 67 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது.

 இந்த திட்டம், அறிவிப்போடு நின்று விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற எவரும் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

 இந்த திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில் திட்டம் சாத்தியப்படாது என தொழிலதிபர்கள் கூறிவிட்டதால் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 கங்கைகொண்டான் ஐ.டி. பார்க்: தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ், 2007-ல் திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானும் தேர்வு செய்யப்பட்டது.

 இங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க "சிப்காட்' நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இங்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க தொழில் முனைவோரை ஈர்க்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற "எம்பவர்-ஐ.டி.' முகாம் ஒன்றும் நடத்தப்பட்டது.

 இங்கு தொழில் நிறுவனங்களை அமைக்க ஏற்கெனவே 2 நிறுவனங்களுக்கு மட்டுமே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களும் இதுவரையில் எந்தப் பணியையும் தொடங்கவில்லை.

 இந்த தொழில்நுட்ப பூங்கா மூலம் முதல் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக 1.20 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. அதுவும் இதுவரையில் கானல் நீராகத்தான் உள்ளது.

 இப்போது, திட்டத்தைச் செயல்படுத்தும் "எல்காட்' நிறுவனத்திற்கான அலுவலகம் கட்டும் பணிகள் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த உடன் தொடங்கப்படும் என கூறுகிறார்கள்.

 இந்த மூன்று பெரிய திட்டங்களும் சொன்னபடி நிறைவேற்றப்பட்டிருந்தால் மொத்தம் சுமார் 2.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இம் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 2.24 லட்சம் மட்டுமே. அப்படியானால் வேலைக்கு "ஆள் இல்லை' என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுபவர் இந்த திட்டங்களை நிறைவேற்ற முயல வேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT