திருநெல்வேலி

களக்காடு மலையில் தேக்கு மரம் வெட்டி கடத்தல்: அணைக்கு ஆபத்து

 திருநெல்வேலி, மே 9: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில்  அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளாலும், தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாலும் வடக்குப்  பச்சையாறு அண

ப. இசக்கி

 திருநெல்வேலி, மே 9: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில்

 அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளாலும், தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாலும் வடக்குப்

 பச்சையாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 காங்கிரஸ், திமுக, அதிமுக என முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கட்சிப் பாகுபாடு

 இல்லாமல் கைகோர்த்துக் கொண்டு இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதால் அவற்றை

 அதிகாரிகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 மழைக் காலங்களில் பச்சையாற்றிலிருந்து தாமிரபரணி ஆற்றில் கலந்து கடலுக்கு வீணாகச்

 செல்லும் சுமார் 884 மில்லியன் கன அடி நீரை சேமித்து வறட்சிப் பகுதியான நான்குனேரிக்கு கொண்டு

 செல்ல வடக்குப் பச்சையாறு அணை ரூ. 45.38 கோடியில் கட்டப்பட்டது.

 இந்த அணையின் மூலம் நான்குனேரி கால்வாய் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே உள்ள 5

 அணைக்கட்டுகளின் வாயிலாக 17 கிராமங்களில் உள்ள 69 குளங்களுக்கு பாசன வசதி உறுதி

 செய்யப்பட்டுள்ளது. அந்த குளங்கள் மூலம் மொத்தம் 9,593 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று

 வருகின்றன.

 2003-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த அணை இரண்டொரு முறை மட்டுமே முழுமையாக

 நிரம்பியுள்ளது.

 நீர்வரத்துக்கான வாய்ப்புகளை உறுதி செய்த பின்புதான் அணை கட்டப்பட்டிருக்க வேண்டும்.

 ஆனாலும், அணை முழுமையாக நிரம்பாததற்கு ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் மடைமாற்றி

 விடப்படுவதுதான் காரணம் என்று தெரிகிறது.

 வடக்குப் பச்சையாறு நீர்த்தேக்க வளாக வரம்பு எல்லைக்குள் சுமார் 50 பேர் 6.73 ஹெக்டேர் அரசு

 நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பொதுப் பணித் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

 இந்த நிலங்களில் வாழை, மா, நெல்லி உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த

 பயிர்களுக்கு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் பெரிய கால்வாய்கள் மூலம்

 திருப்பிவிடப்படுகின்றன. பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால்களும், குட்டைகளும்கூட

 வெட்டப்பட்டுள்ளன என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.

 அணைக்கு வரும் தண்ணீர் இவ்வாறு மடைமாற்றி விடப்படுவதால், பச்சையாற்றின் பரம்பரை

 பாசனம் மற்றும் அணையின் பாசனப் பகுதிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் புகார்

 கூறப்படுகிறது.

 அணை கட்டுவதற்கு தேவையான நிலத்தில் ஒரு பகுதியை திருவாவடுதுறை ஆதீனம்

 வழங்கியுள்ளது. தற்போது அரசு நிலம் மட்டுமின்றி ஆதீனத்தின் நிலத்தையும் சிலர் போலியான

 ரசீதுகள் மூலம் ஆக்கிரமித்து பயிர் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

 ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என பொதுப் பணித் துறை

 சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும்

 எவரும் வெளியேறவில்லை. மாறாக போராட்டம் நடத்தினர்.

 தேக்கு மரங்கள் கடத்தல்: இதனிடையே, மடத்தின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களில் சிலர்

 அங்குள்ள விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தி வருவதாகவும், அதைத் தடுக்க உரிய

 நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மடத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடமும், காவல்

 துறையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் எந்த நடவடிக்கையும்

 எடுக்கப்படவில்லை.

 வெட்டிக் கடத்தப்பட்டுள்ள தேக்கு மரங்களின் மதிப்பு மட்டும் ரூ. 20 கோடிக்கு மேல் இருக்கும் என

 மடத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

 மரம் வெட்டப்படுவது தடுக்கப்படாவிட்டால் வனப் பகுதி அழிந்து மழை வளம் குறையும்.

 அணையின் நீர்வரத்தைப் பாதிக்கும் நிலையும் ஏற்படும்.

 இந்த ஆக்கிரமிப்பு மற்றும் மரம் கடத்தலில் காங்கிரஸ், திமுக, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய

 புள்ளிகளும் அடங்குவர் என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.

 ""ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

 தற்போது தேர்தல் நேரம் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என

 பொதுப் பணித் துறை அமைச்சர் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து விட்டதாகத்

 தெரிகிறது. சிலர் விவசாயப் பணிகளுக்கு எனக் கூறி நீதிமன்ற உத்தரவைப் பெற்று இயந்திரங்களை

 மலைக்கு மேலே கொண்டு சென்று தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மீது ஏன்

 நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 ஆக்கிரமிப்புகளை அகற்றி, மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்காவிட்டால் பச்சையாறு அணை

 வறண்டு பாழ்பட்டு விடும். இந்தப் பிரச்னையில் அரசு தெரிந்தே மெüனம் சாதிக்கிறதா?

 அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளைக்கு பச்சையாறு அணை பலியாகப் போகிறதா? யார் வீட்டு

 சொத்தை யார் கொள்ளையடிப்பது? கேள்வி கேட்பாரே இல்லையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT