புலிகள் காப்பகத்தில் அரிய வகை விலங்குகள் பாதுகாக்கப்படுமா?
அம்பாசமுத்திரம், நவ. 22: களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அரிய வகை விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடியில் இருந்து க
அம்பாசமுத்திரம், நவ. 22: களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அரிய வகை விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெயர் பெற்ற இப் புலிகள் காப்பகம், இந்தியாவில் தாவரப் பன்மை, தற்சூழல் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற 5 இடங்களில் ஒன்றாகும். இக் காப்பகத்தில் சிங்கவால் குரங்கு, கருமந்தி போன்ற 5 வகை குரங்குகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், யானை, காட்டெருமை, மிளா, புள்ளிமான், சருகுமான், கேளை ஆடு, உடும்பு, ராஜநாகம், எறும்புத்தின்னி போன்ற அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. இதில் 700-க்கும் மேற்பட்ட பாலூட்டும் இனங்களும் அடங்கும்.
காப்பகம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் உள்ளன. இதில் 150-க்கும் மேற்பட்ட தாவரங்கள் உலகில் வேறு எங்கும் இல்லாதவை.
110 கி.மீ. சுற்றளவு கொண்ட இக் காப்பகத்தில் 150-க்கும் மேற்பட்ட மலையடிவாரக் கிராமங்கள் உள்ளன. இக் கிராம மக்கள் வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராம வனக்குழுக்கள் துவங்கப்பட்டு கடனுதவி நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் புலிகள் காப்பகத்தில் இருந்து மரங்களை வெட்டி எடுப்பது குறைந்துள்ளது. மேலும், மரம் வெட்டி கடத்தும் கும்பல்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இங்குள்ள விலங்குகளைக் கண்டறியும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இங்கு யானைகள் பெருமளவில் உள்ளன. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மலையடிவாரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதைக் காண முடியும்.
இக் காப்பகத்தில் புலியை பொதுமக்கள் காண வாய்ப்பில்லை. மலையடிவாரக் கிராமங்களில் அதிக அளவில் நடமாடும் சிறுத்தைப்புலியை காணலாம்.