முகப்பு
திருநெல்வேலி

புத்துயிர் பெறுமா சுனாமி பூங்கா?

கன்னியாகுமரி, அக். 26:    சுனாமி என்றாலே ஆபத்து என்றுதான் பொருள். சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவிலும் ஆபத்து காத்திருந்தால்...?   கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:05 PM
பகிர்:

கன்னியாகுமரி, அக். 26:    சுனாமி என்றாலே ஆபத்து என்றுதான் பொருள். சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவிலும் ஆபத்து காத்திருந்தால்...?

  கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி பூங்காவில் தான் அத்தகைய ஆபத்து காத்திருக்கிறது.

  பூங்காவில் உள்ள மின் வயர்கள் சேதமடைந்து வெளியே நீண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

  குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இப் பூங்கா, 2005, டிசம்பர் 26-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

  பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடல் அழகை ரசிக்கும் வகையில் நவீன இருக்கைகள், பூங்காவைச் சுற்றிலும் வெளிநாட்டு புற்செடிகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன.

  இப் பூங்காவை ஓராண்டு வரை சிறப்பாக பராமரித்து வந்த கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம், திடீரென பராமரிப்புப் பணியை நிறுத்தியது. இதனால் பூங்காவில் இருந்த அலங்கார புல் செடிகள் தண்ணீரின்றி கருகின.

  இதையடுத்து, பூங்காவை பராமரிக்கும் பொறுப்பை தனியார் நிர்வாகம் ஏற்றது. ஆயினும், பூங்கா சரிவர பராமரிக்கப்படவில்லை.

  தற்போது அலங்கார விளக்குகள் அனைத்தும் துருப்பிடித்து சரிந்து விழும் நிலையில் உள்ளன. இருக்கைகள் அனைத்தும் உடைந்த நிலையில், கிட்டத்தட்ட பூங்கா அழிவின் பிடியில் உள்ளது.

  அலங்கார விளக்குகளுக்காக அமைக்கப்பட்ட மின்சார வயர்கள் பழுதடைந்து வெளியே நீண்டு கொண்டிருப்பதால் பூங்காவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீண்டும் நவீன முறையில் இப் பூங்காவை சீரமைத்து, பராமரிப்புப் பணிக்காக பணியாளரை நியமிக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.